சண்டிகர், ஜூன் 14 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்திய மாம்பழங்களுக்கான ஏற்றுமதித் தடையினைத் தொடர்ந்து தற்போது ஈரானில், இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பசுமதி அரிசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா சந்திக்கும் இரண்டாவது சர்வதேச ஏற்றுமதித் தடை இதுவாகும்.
இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசி, வளைகுடா நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஈரான் நாட்டிற்கு அதிக அளவு பாசுமதி அரசி ஏற்றுமதியாகின்றது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாசுமதி அரசியை இறக்குமதி செய்ய ஈரான் அரசு தடை விதித்துள்ளது.
இந்திய பாசுமதி அரிசியில், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆர்சனிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களின் கலப்பு அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதனை காரணம் காட்டி இறக்குமதியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்த ஈரான், தற்போது முழுமையாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் பாசுமதி அரசியை அதிக அளவு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் பங்குகள் வகிக்கின்றன.