சென்னை, ஜூன் 14 – ‘ஊழல் இந்தியா’ என்ற அவப்பெயரை மாற்றுவோம் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘ஊழல் முதலமைச்சர்’ என்ற அவப்பெயருக்கு எப்போது முடிவு கட்டப் போகிறார்? என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுட்டிக்காட்டி திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குற்றப் பின்னணியைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இன்றைய “ஆனந்த விகடன்” வார இதழில் பத்திரிகையாளர் ப. திருமாவேலன் “17 வருடங்கள் – திகில் ஜெயலலிதா கேஸ் – பகீர் பெங்களூரு ரேஸ்”” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.
மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, 66 கோடிக்கும் மேலான சொத்தை எப்படி வாங்க முடியும்? இந்த ஒற்றைக் கேள்விக்குப் பதில் தேடித்தான் 17 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது.
இந்த வழக்கை நடத்துவதற்கு அரசும், நீதித் துறையும், ஜெயலலிதா தரப்பும் இதுவரை செலவு செய்திருக்கும் தொகை குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகையை விடக் கூடுதலாக இருக்கும்.
கால விரயம், பொருள் விரயம் மட்டுமல்ல, நீதியும் விரயம் ஆகிக் கொண்டு இருப்பதன் அடையாளம் இது. “பதவியில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில் அவை தொடரப்பட்ட ஓர் ஆண்டு காலத்துக்குள் வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் முடித்து விட வேண்டும் என்று இன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா சொல்லியிருக்கிறார்.
முதல் வழக்காக இதிலேயே அதனை அமல்படுத்தலாமே? “நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும் உங்களை விடச் சட்டம் பெரிது”” என்று இதே வழக்கில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சீமா ஆகியோர் எழுதினார்கள்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நாடாளு மன்றத்தில் பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குற்றப் பின்னணியைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.
குற்றப் பின்னணி உள்ள ஒரு முதலமைச்சர் மீதான வழக்கு 17 ஆண்டுகளாக வாய்தாவுக்குள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறதே, அதற்கு எப்போது தீர்வு? “ஊழல் இந்தியா” என்ற அவப்பெயரை மாற்றுவோம் என்று கூறியுள்ள பிரதமர், “ஊழல் முதல் அமைச்சர்” என்ற அவப் பெயருக்கு எப்போது முடிவு கட்டப் போகிறார்? என கருணாநிதி கூறியுள்ளார்.