நியூசிலாந்து, ஜூன் 16 – கடந்த மார்ச் 8 -ம் தேதி, 239 பயணிகளுடன் மாஸ் விமானம் எம்எச் 370 மாயமாகி, இன்றோடு 100 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், அது குறித்து நாளுக்கு நாள் புதுபுது தகவல்களும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ‘குட் நைட் மலேசியன் 370 தி ட்ரூத் பிஹைண்ட் தி லாஸ் ஆப் பிளைட் 370’ என்ற புத்தகம், விமானம் பற்றிய புதிய திடுக்கிடும் தகவலை கூறி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
காரணம், இந்த புத்தகத்தை எழுதிய நியுசிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான ஈவான் வில்சன் மற்றும் ஜெப் டெய்லர் ஆகிய இருவரும், விமானம் விபத்திற்குள்ளாகவில்லை என்றும், விமானம் மாயமாவது முன்பே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தங்களது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புத்தகம் குறித்து டெய்லர் கூறுகையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்னரே இந்த புத்தகத்தை எழுதியுள்ளோம். இது திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ள செயல். விமானம் இந்தியப் பெருங்கடலில் மூழ்குவதற்கு யார் காரணம் என்பதை அறிந்தே இதை வெளியிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
நியுசிலாந்து எழுத்தாளர்களின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா தேடுதல் பணியை தொடரும்
இதனிடையே, காணாமல் போன எம்எச் 370 விமானத்தை தேடும் பணியில் மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீண்டும் கூறியுள்ளார்.
“எம்.எச் 370 விமானம் காணாமல் போய் நூறு நாட்களாகிவிட்டன. விமானத்தில் இருந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நினைவில் கொண்டு தேடும் பணியில் மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்தும்” என்று நஜீப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.