பிப்ரவரி 19 – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் ஹிண்ட்ராப் இயக்கத்தினரின் விடுத்து வரும் கோரிக்கைகளும், வழங்குகின்ற கணக்குகளும் பலரின் புருவங்களை உயர்த்த வைக்கும் கேள்விக் குறிகளாகின்றன – சில சமயங்களில் கேலிக் கூத்துக்களாகவும் ஆகின்றன.
நாடு முழுமையும் ஒரே மலேசியா என்ற நோக்கில் தேசிய முன்னணி தங்களின் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்ல – மலேசியர்களுக்கான மலேசியா என்ற ஒருமித்த கருத்தில் பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணி தங்களின் வாதங்களை முன்வைக்க – ஹிண்ட்ராப் இயக்கத்தினரோ இடையில் நுழைந்து ஐந்தாண்டு செயல் திட்டம் என்ற பெயரில் ஆவணம் ஒன்றை வைத்துக் கொண்டு இதனை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் எங்களின் ஆதரவு என்ற விதண்டாவாதத்தை அரங்கேற்றி வருவது நடைமுறை அரசியலுக்கு முற்றிலும் பொருந்தாத அரசியல் அணுகுமுறையாகும்.
ஹிண்ட்ராப் தியாகங்களை யாரும் மறந்துவிடவில்லை….
ஹிண்ட்ராப் மீது இந்தியர்கள் இன்னும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்! அதற்குக் காரணம் அவர்களின் இன்றைய நடவடிக்கைகள் அல்ல!
அன்று – 2007ஆம் ஆண்டில் அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் அதனைத் தொடர்ந்த அவர்களின் தியாகமும் தான் மக்களின் மனங்களில் இன்னமும் அவர்களுக்கு, கல்லில் சிலையென நிலையானதொரு இடத்தை பெற்றுத் தந்துள்ளது.
நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டவர்கள், உறக்கத்தில் இருந்தவர்களை தடாலடியாகத் தட்டி எழுப்பியவர்கள் ஹிண்ட்ராப் இயக்கத்தினர்தான் என்பதில் இருவித கருத்துக்கள் இருக்க முடியாது.
2008 பொதுத் தேர்தலுக்கு முன்னர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களை அப்போதைய பிரதமர் அப்துல்லா படாவி விடுதலை செய்திருந்தால் அந்தளவுக்கு இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக ஒன்று திரண்டு 2008 பொதுத் தேர்தலில் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகமே!
ஆனால், அதே சமயம் எதிர்க் கட்சிகள் கூட்டணியாக ஒன்றிணைந்து, ஒரு தொகுதியில் ஒரே எதிர்க்கட்சி என்ற வியூகத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் விளைவுதான் தேசிய முன்னணியின் வரலாறு காணாத தோல்விக்கான முக்கிய காரணம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது – மறைக்கவும் கூடாது!
2008 பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப்பின் போராட்டங்களை தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகளாக எதிர்க்கட்சிகள் மாற்றி, மாற்றத்தை ஏற்படுத்தாமல் போயிருந்தால், ஹிண்ட்ராப்பின் போராட்டமும் அர்த்தமில்லாமல் போயிருக்கும்.
தேசிய முன்னணி அரசாங்கமும் இன்றைக்கு இவ்வளவு தூரம் இறங்கி வந்து இந்திய சமுதாயத்தை குறிப்பாக இந்திய வாக்காளர்களை இந்த அளவுக்கு கரிசனத்தோடும், அக்கறையோடும் “கவனிக்கும்” சூழ்நிலையும் ஏற்பட்டிருக்காது.
ஹிண்ட்ராப்பின் அணுகுமுறை சரியா?
ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் சூழ்நிலைகள் இன்று முற்றாக மாறியுள்ள ஒரு சூழ்நிலையில் சாதுரியத்தோடு செயல்பட்டு அரசியல் ரீதியாக சாதிப்பதை விட்டுவிட்டு, ஒரு ஆவணத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களுக்கு ஆதரவு என ஹிண்ட்ராப் மல்லுக் கட்டி நிற்பது பொருத்தமில்லாத ஒரு அணுகுமுறையாகும்!
மாறாக, தேசிய முன்னணி, மக்கள் கூட்டணி என்ற இரண்டு தரப்பினருடனும் முன்கூட்டியே கட்டுப்பாடுகள் விதிக்காமல், திறந்த மனதுடன் பேசி, தற்கால அரசியல் நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வது எப்படி – அதன் மூலம் இந்தியர்களுக்கு பெரும்பான்மையான நலன்களும் பலன்களும் கிடைப்பதற்கு, என்ன செய்யலாம் – என சிந்திப்பதும் செயல்படுவதும்தான் ஹிண்ட்ராப் செய்யக் கூடிய பொருத்தமான முடிவாக இருக்க முடியும்.
25 தொகுதிகள் ஹிண்ட்ராப் கைவசமா?
ஹிண்ட்ராப் ஆதரவு இல்லாவிட்டால் ஏறத்தாழ 25 தொகுதிகளில் பக்காத்தான் தோல்வியுறும் என்பது ஓரிரு நாட்களுக்கு முன்னால் பத்திரிக்கைகளில் தலைப்பாக இடம் பிடித்த செய்தி!
இந்தியர்கள் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல – அதற்கும் கூடுதலாக சுமார் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாகத் திகழ்கின்றார்கள் என்பது பல முறை ஆய்வின் மூலம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.
ஆனால், ஹிண்ட்ராப் எடுக்கப் போகும் முடிவை வைத்துத்தான் இந்தியர்களும் வாக்களிக்கப் போகின்றார்கள் என நிர்ணயம் செய்தது யார்?
இந்த 25 தொகுதிகளிலும் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஹிண்ட்ராப் ஆதரவு வாக்காளர்கள்தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கப் போகும் முன்னர் – வாக்குச் சீட்டுகளில் தங்களின் குறியீட்டை தீட்டும் முன்னர் – அவர்களின் மனங்களில் எழும்பப் போகும் கேள்வி, மீண்டும் தேசிய முன்னணியா அல்லது மாற்றத்தை விளைவிக்க மக்கள் கூட்டணியா என்பதுதான்!
இடையில் ஹிண்ட்ராப் முடிவு என்ன – அவர்களின் முடிவின் படிதான் நாங்களும் முடிவெடுப்போம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க, சிந்திக்க இந்தியர்களுக்கு வாய்ப்பும் இல்லை – கால அவகாசமும் இல்லை.
அப்படியே ஹிண்ட்ராப் எந்த முடிவும் எடுக்காவிட்டால் அதற்காக இந்திய வாக்காளர்களும், வாக்களிக்கப் போகாமல் தங்களின் வீடுகளின் மூலைகளில் முடங்கிக் கிடக்கப் போவதுமில்லை.
2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹிண்ட்ராப் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள முடியாமல் ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றார்கள். தங்களுக்குக் கிடைத்த புகழை, மரியாதையை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு சுய நோக்கத்திற்காக அரசியல் கட்சிகளுடன் ஐக்கியமானார்கள் – அல்லது அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்தார்கள்.
எனவே, அவர்களின் கடந்த கால போராட்டங்களுக்குத்தான் மக்கள் மதிப்பு தருகின்றார்களே தவிர, அதன் பின்னர் ஹிண்ட்ராப் தலைவர்கள் தன்னிச்சையாக – தங்களின் சொந்த சுயநலன்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றினார்கள் – அதனால் இந்தியர்களின் மனங்களில் இருந்து நெடுந்தூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மையாகும்.
13வது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் முடிவு என்ன?
13வது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் எடுக்கப்போவது அரசியல் முடிவு! தேசிய முன்னணியா – மக்கள் கூட்டணியா என்ற அரசியல் முடிவு!
இதில் ஹிண்ட்ராப் ஆதரவு இல்லாவிட்டால் மக்கள் கூட்டணி 25 தொகுதிகளை இழக்கும் என எச்சரிப்பது வெறும் கண்துடைப்பு!
ஹிண்ட்ராப் ஆதரவு மக்கள் கூட்டணிக்கு இல்லையென்றால் இந்தியர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கே மாற்றி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் பகல் கனவாகவே முடியும்!
நாளையே, ஹிண்ட்ராப் தலைவர்கள் தேசிய முன்னணிக்குத்தான் எங்களின் ஆதரவு என்று அறிவித்தால் உடனே இந்திய வாக்காளர்கள் அனைவரும் படை திரண்டு தேசிய முன்னணியின் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என ஹிண்ட்ராப்பினர் எதிர்பார்ப்பதும் தவறாகவே முடியும்.
அதே சமயத்தில் தேசிய முன்னணிதான் மீண்டும் வரவேண்டும் என முடிவெடுத்துவிட்ட ம.இ.கா, பிபிபி மற்றும் ஐபிஎப் போன்ற தேசிய முன்னணி சார்பு இந்திய வாக்காளர்கள், ஹிண்ட்ராப் தலைவர்களின் முடிவு என்னவாக இருந்தாலும் தேசிய முன்னணி பக்கமே நிற்பார்கள் என்பது உறுதி.
இன்னொரு புறத்தில், பிகேஆர், ஜசெக கட்சிகள் மற்றும் பாஸ் ஆதரவாளர்கள் குழு ஆகியவற்றின் மூலமாக மாற்றத்தை விரும்பும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இந்திய வாக்காளர்கள் – என்னதான் நடந்தாலும், ஹிண்ட்ராப் எந்தப் பக்கம் சாய்ந்தாலும் – இறுதிவரை எதிர்க்கட்சிகளுடன் இருந்து அவர்களுக்குத்தான் வாக்களிக்கப் போகின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ஹிண்ட்ராப் தலைவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!
நீங்கள் தவிர்க்கக் கூடாத – தவற விடக் கூடாத தருணம் இது!
உங்களின் ஐந்தாண்டு செயல் வரைவு திட்டத்தை சற்றே தள்ளிப் போடுங்கள்!
அப்படியே அந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வோம் என்று ஓர் அரசியல் கூட்டணி உங்களிடம் இன்றைக்கு கூறிவிட்டு நாளைக்கு செயல்படுத்தாவிட்டால் என்ன செய்யப் போகின்றீர்கள்? அடுத்த ஐந்தாண்டுகளைத் தொலைத்து விடுவீர்கள்!
எனவே, பேச்சு வார்த்தைக்கான காலம் இன்னும் கனிந்தே இருக்கின்றது. உங்களுக்கான வாசல்களும் திறந்தே இருக்கின்றன. மனங்களையும் திறந்து வைத்துக் கொண்டு, ஆவணங்களை சற்று தள்ளி வைத்து விட்டு அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் – ஆவண ரீதியாக பேச்சு வார்த்தை நடத்தாதீர்கள்!
தற்போதை அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவெடுங்கள். மக்களின் மன ஓட்டங்களுக்கு ஏற்ப முடிவெடுங்கள்! மாற்றங்களின் தேவைகளைக் கருதி முடிவெடுங்கள்.
யார் ஆட்சிக்கு வந்தால் மாற்றங்கள் சாத்தியமாகும் என சிந்தியுங்கள்! மாறாக உங்களின் திட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விதண்டாவாத சித்தாந்தத்தை விட்டொழியுங்கள்.
மக்களின் மனங்களில் இருந்ததை 2007இல் செயல்படுத்திக் காட்டியதால்தான் – பிரதிபலித்ததால்தான் – ஹிண்ட்ராப் இயக்கத்தினர் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வலம் வந்தார்கள்! சரித்திரத்திலும் இடம் பிடித்தார்கள்!
இதோ உங்களுக்கு 2013இல் இன்னொரு வாய்ப்பு!
இரண்டு தரப்பினருடன் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்காமல் அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தை நடத்துங்கள்! அவர்களுக்கு இருக்கும் நடைமுறை அரசியல் சிக்கல்களுக்கும் சில திட்டங்களை செயலாக்குவதில் அவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகளையும் செவிசாய்த்துக் கேளுங்கள்.
உங்களின் சில திட்டங்களை அவர்கள் ஏற்கனவே செயல்படுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் செயல்படுத்தி வருகின்றார்கள் என்பதையும் எதிர்காலத்தில் செயல்படுத்துவதாக எழுத்து பூர்வமான வாக்குறுதிகளை – நீங்கள் கூறுகின்ற வடிவத்தைப் போல் அல்லாது – வேறு வேறு வடிவங்களில் வழங்கியிருக்கின்றார்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்! மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் எந்த கூட்டணி என்பதை தெளிவாக முடிவெடுங்கள்!
நீங்கள் எடுக்கும் முடிவு இன்றைய இந்தியர்களின் எண்ண ஓட்டத்தோடு ஒத்திருந்தால் – இன்றைய இளைய சமுதாய இந்தியர்களின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிப்பதாக இருந்தால் – 25 தொகுதிகளில் மட்டுமல்ல எல்லாத் தொகுதிகளிலும் இந்தியர்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.
சரித்திரமும் உங்கள் பக்கம் நிற்கும்!
இல்லாவிட்டால் இந்தியர்களின் வாழ்வில் – இந்திய சமுதாயத்தின் எதிர்கால அரசியல் பாதையில் – மாற்றங்களை ஏற்படுத்தவல்ல ஒரு பொன்னான தருணத்தை இழந்து விட்ட – தொலைத்து விட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள்!
-இரா.முத்தரசன்