வாஷிங்டன், பிப். 18- அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு, எட்டு ஆண்டுகளுக்குள், முறையான குடியுரிமை வழங்க, அமெரிக்க அரசு முன்வந்து உள்ளது.
அமெரிக்காவில் குடியேற, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் அமெரிக்காவில் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக, முறையான விசாவுடன், அமெரிக்காவுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறுபவர்களுடன், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களும், அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி, அங்கேயே தங்கிவிடுபவர்களும் ஏராளம்.
எனவே இந்நிலையில், அந்நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும், ஒரு கோடி வெளிநாட்டவர்களுக்கு, எட்டு ஆண்டுகளுக்குள், முறையான குடியுரிமை வழங்க, அமெரிக்க அரசு உத்தேசித்து உள்ளது.
இதற்கான சட்டவரைவு, பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைப்படி, முறையான அமெரிக்க விசா பெற விண்ணப்பிப்பவர்கள், தங்கள் குற்றப்பின்னணி, மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிப்பதுடன், கட்டண தொகையும் செலுத்த வேண்டும்.
தொடர்ந்து, இவர்களின் விசா அங்கீகரிக்கப்பட்டவுடன், அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிக்கவும், பணிபுரியவும் அனுமதி வழங்கப்படும்.
மேலும், அங்கீகாரத்தை இழக்காமல், தங்கள் சொந்த நாடுகளுக்கு குறுகிய கால பயணம் சென்று வரவும் அவர்கள் அனுமதிக்கப்படுவர்.
அதன்பின், அவர்களுக்கு வழங்கப்படும் முறையான வசிப்பிட அடையாள அட்டையை வைத்து, எட்டு ஆண்டுகளில், பச்சை நிற அடையாள அட்டைக்கு (க்ரீன் கார்டு) விண்ணப்பிக்கலாம்.
ஆனால், அதற்கு ஆங்கிலமும், அமெரிக்க வரலாறும் கற்பதுடன், குறிப்பிட்ட வரிகளையும் அவர்கள் செலுத்த வேண்டும்.
பச்சை நிற அடையாள அட்டை (க்ரீன் கார்டு) பெற்றவர்கள், அமெரிக்கக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த சட்டவரைவுக்கு, அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.