பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – மலேசியாவின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களின் ஒன்றான எம்சிஐஸ் (MCIS) ஜூரிக் இன்சூரன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் இனிமேல் எம்சிஐஸ் இன்சூரன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது.
சன்லாங் குழுமம் என்ற தென் ஆப்பிரிக்கவின் நிதி சேவை நிறுவனம் ஒன்று எம்சிஐஎஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை எம்சிஐஎஸ் கூட்டுறவு கழகத்திடம் இருந்து கடந்த மே 5 -ம் வாங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் நடப்புக்கு வருகிறது.
இந்த வர்த்தக உடன்பாட்டினால் ஏற்கெனவே எம்சிஐஸ் ஜூரிக் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த ஜூரிக் ஏசியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் எம்சிஐஎஸ் ஜூரிக் நிறுவனத்திலிருந்து பங்குதாரர்களாக விலகிக் கொண்டது. புதிய பங்குதாரரான சன்லாங் குழுமம் இனி மற்ற சிறுபான்மை பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை வாங்கி தனது பங்கு இருப்பை 51 சதவீதமாக எம்சிஐஎஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உயர்த்திக் கொள்ளும் என எதிர்பார்கக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 387.6 மில்லியன் மலேசிய ரிங்கிட் விலையில் எம்சிஐஎஸ் ஜூரிக் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை எம்சிஐஎஸ் கூட்டுறவு கழகத்திடமிருந்து வாங்குவதற்கு சன்லாங் குழுமம் முன்மொழிந்தது.
பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து எம்சிஐஎஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இணையத்தள பக்கங்களும் பெயர் மாற்றம் கண்டுள்ளன. இனி www.mcis.my என்ற இணையத்தளத்திற்கு சென்று நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம். இருப்பினும், பழைய பெயரில் பதிவு செய்யப்பட்ட காப்புறுதி பத்திரங்கள் அனைத்தும் எந்த பெயர் மாற்றமும் இன்றி புழக்கத்தில் இருந்து வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.