வாஷிங்டன், ஜூன் 19 – டில்லியில் இருந்து 10 வயதில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள லாரல் பகுதிக்கு வந்த பிரதிஷ்டா கன்னா தற்போது மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயின்று வருகிறார். பிரதிஷ்டா, அமெரிக்காவில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
புலம் பெயர்ந்த இளைஞர்களை பாதுகாப்பதற்கு சிறப்புத் திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தில் கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்த அரசு பாராட்டி கௌரவ விருது வழங்கும்.
அவ்வகையில், அமெரிக்காவில் கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘மாற்றத்துக்கான நாயகர்’ (சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச்) விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதிஷ்டா கன்னா என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த டில்லியைச் சேர்ந்த பிரதிஷ்டா கன்னா உட்பட 10 பேர் கல்வியிலும், தொழிலிலும் வெற்றிகரமாக செயல்பட்டு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். சமூக அக்கறையுடன் மற்றவர்களுக்கும் இவர்கள் உதவி செய்து வருகிறார்கள் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.