Home வணிகம்/தொழில் நுட்பம் ஜொகூர் மின்சக்தி திட்டத்திலிருந்து ஒய்டிஎல் விலகல்!

ஜொகூர் மின்சக்தி திட்டத்திலிருந்து ஒய்டிஎல் விலகல்!

622
0
SHARE
Ad

ytl_powerஜோகூர், ஜூன் 19 – ஜொகூர் மாநிலத்தில் தொடக்கப்படவிருந்த புரொஜெக்ட் 4A எனப்படும் மின் உற்பத்தி திட்டத்திலிருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக ஒய்டிஎல் (YTL) பவர் இன்டர்நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜொகூர் மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் பெருகி வரும் தொழில் மையத் திட்டங்களினால் மின்சக்தியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் முதல் 1400 மெகாவாட் வரை மின் சக்தியை உற்பத்தி செய்யும திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தது.

இந்தத் திட்டத்தில் எஸ்ஐபிபி (SIPP) செண்ரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் தெனாகா நேஷனல் மற்றும் ஒய்டிஎல் பவர் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் பங்கு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தன. இந்த மூன்று நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு வர்த்தக அமைப்பாக இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

இதில் எஸ்ஐபிபி என்ற நிறுவனம் ஜொகூர் சுல்தானுக்கு தொடர்புடைய நிறுவனமாகும் என்று தெரிகிறது. இந்தத் திட்டத்தில் தாங்கள் வர்த்தகப் போட்டியுடைய நிறுவனமாகவே தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்ததாகவும் கூட்டு வர்த்தக அமைப்பில் இந்தத் திட்டத்தில் பங்கு பெற தாங்கள் விரும்பவில்லை என்று ஒய்டிஎல் நிறுவனம் அறிவித்துள்ள அறிக்கையில் தெரிவித்ததுள்ளது.

3 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புடைய இந்த மின்சக்தி திட்டம் பகிரங்கமான குத்தகை மூலம் தேர்ந்தெடுக்கப்படாமல், வேண்டியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் விதமாக இதன் குத்தகை வழங்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்புகளிலிருந்து கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளது. இதன் காரணமாகவே ஒய்டிஎல் நிறுவனம் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

அண்மையில் எழுந்த சர்ச்சை ஒன்றில் வொய்டிஎல் நிறுவனத் தலைவர் பிரான்சிஸ் யோ அரசாங்கத்தில் தனக்குள்ள செல்வாக்கினாலும் உயர்மட்ட தலைவர்களிடம் உள்ள பழக்கத்தினாலும் தான் வர்த்தக வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த பிரான்சிஸ் யோ தங்களின் நிறுவனம் எப்பொழுதுமே வர்த்தங்களில் போட்டியிடும் தன்மையையே பின்பற்றி வந்ததுள்ளதாகவும் மற்றவர்களை விட சிறந்த முறையில் குத்தகை விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததால் தான் தங்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைத்தன என்று கூறியிருந்தார்.

மின்சக்தி உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஒய்டிஎல் இந்த ஜொகூர் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளும் காரணத்தால் இந்தத் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா?அல்லது ஒத்திவைக்கபடுமா? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.