சென்னை, ஜூன் 19 – திரையுலகில் சிறந்தவர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஐடியா நிறுவனம் பிலிம்பேர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டிற்கான 61வது பிலிம்பேர் விருது சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கென நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியின் போது, பத்திரிகையாளார்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், மற்ற விருதுகளை விட பிலிம்பேர் விருது தனிச்சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்த விருது அனைத்து மொழி படங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இது மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும். இவ்விருதை ஒரு தடவையாவது பெற்று விட வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகனின் கனவு. எனக்கும் அந்த கனவு இருந்தது. நான் 2002-ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தேன். ஆனாலும் இந்த விருதுக்காக நான் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இறுதியாக ஆடுகளம் திரைப்படத்திற்காக எனக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அதன் பின்னர் 3 திரைப்படத்திற்காக எனக்கு மூன்று பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது. இந்த விருது இந்த வருடமும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறென்.
இந்த வருடம் மட்டுமல்ல அனைத்து வருடமும் ஒரு பிலிம்பேர் விருது வாங்க வெண்டும் என்று ஆசைப்படுகிறேன்“ என்று தெரிவித்தார். தனுஷ் நடித்த மரியான் திரைப்படம் விருது பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.