கோலாலம்பூர்,ஜூன் 19 – மலேசியாவில் தற்போது கெந்திங் மலையில் மட்டும் ஒரே ஓர் அதிகாரப்பூர்வ சூதாட்ட விடுதி கெந்திங் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.
நீண்ட காலமாக இரண்டாவது சூதாட்ட மையத்தை பகாங் மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச விடுதியான பெர்ஜெயா ஹில்ஸ் ரிசோர்ட் என்ற இடத்தில் தொடங்குவதற்கு நாட்டின் பிரபல கோடீஸ்வர வணிகரான டான்ஸ்ரீ வின்சென்ட் டான் (படம்) முயற்சிகள் மேற்கொண்டு வந்திருக்கின்றார்.
தற்போது நாட்டின் இரண்டாவது சூதாட்ட மையத்திற்கான அரசாங்க அனுமதிகளை பெறும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதாக வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்படுவது அவ்வளவு எளிதல்ல என்றும், இதற்கு பல்வேறு வட்டாரங்களில் இருந்து கடுமையான எதிர்ப்புக் குரல்கள் புறப்படலாம் என்றும் அந்த வணிக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சிங்கப்பூரில் சில வருடங்களுக்கு முன்னாள் இரண்டு சூதாட்ட மையங்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மலேசியாவிலும் இரண்டாவது சூதாட்ட விடுதியை திறக்க வின்சென்ட் டான் மற்றும் அவரது மகன் டத்தோ ரோபின் டான் இருவரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு அவர்களின் எஸ்கோட் ஸ்போர்ட்ஸ் சென்.பெர்ஹாட் (Ascot Sports) நிறுவனம் மூலம் காற்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ சூதாட்டங்களை நடத்தும் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பல்வேறு கோணங்களில் எழுந்த எதிர்ப்புகளால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்த எஸ்கோட்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வின்சென்ட் டானும் அவரது மகனும் பங்குதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், ஒரு பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில், பகாங் மாநிலத்தில் பெர்ஜெயா ஹில்ஸ் விடுதியில் ஒரு சூதாட்ட மையத்தை திறப்பதற்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படும் என்று வின்சென்ட் டான் தெரிவித்திருந்தார்.
இந்த மையத்திற்கு 3 பில்லியன் மலேசிய ரிங்கிட் வரை தான் முதலீடு செய்ய உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இஸ்லாமிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், சில அரசாங்க அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை இந்த இரண்டாவது சூதாட்ட மையத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிப்பார்கள் என்பதால் அத்தனையும் மீறி அரசாங்கம் அத்தகைய சூதாட்ட விடுதிக்கு அனுமதி வழங்குமா என்பது சந்தேகமே என வணிகத் துறை பார்வையாளர்கள் கருதுகின்றனர்.