கோத்தா கினபாலு, ஜூன் 19 -கோத்தா கினபாலுவிலிருந்து லாபுவான் செல்லும், மலேசியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான மாஸ் விங்க்ஸின் ஏடிஆர்72 -500 ரக விமானமான எம்எச் 3041, எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் லாபுவான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணம் செய்த 52 பயணிகளுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
கோத்தா கின்பாலு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில், விமானம் புறப்படும் பொழுது எஞ்சினில் இருந்து பாகம் ஒன்று கீழே விழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவ்விமானத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான சத்தம் வருவதைக் கவனித்த விமானி உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து லாபுவான் விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானம் 8.00 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இது தகவலை மாஸ்விங்க்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.