ஜூன் 20 – கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அந்தஸ்த்தின் அடையாளமாக கருதப்பட்ட ‘ப்ளாக்பெர்ரி’ (Blackberry) செல்பேசிகள் காலப்போக்கில் ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு திறன்பேசிகளின் வளர்ச்சியினால் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்நிறுவனத்தின் கடுமையான முயற்சியின் காரணமாக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் நிகர இலாபம் மார்ச் மாதத்தின் இறுதியில், 9.6 சதவீதத்தை எட்டி இருந்தது. இதன் மதிப்பு 23 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில், அந்நிறுவனம் 84 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் நஷ்டத்தை சந்தித்து இருந்தது.
இதன் மூலம் கடும் நஷ்டத்தை சந்தித்து இருந்த ப்ளாக்பெர்ரி நிறுவனம், மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியுள்ளது. இதன் எதிரொலியாக அந்நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் 200,000 செயலிகளுக்கான ஒப்பதம் ஒன்றை நிறைவு செய்துள்ளது.
புதிய தலைமையின் கீழ் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ள ப்ளாக்பெர்ரி பற்றி அந்நிறுவனத்தின் தலைவர் ஜான் சென் கூறுகையில், “சமீபத்திய நாட்களில் வலுவான தயாரிப்புகளுக்காக சிறந்த அடித்தளத்தை உருவாக்கியது தான் தற்போது ப்ளாக்பெர்ரி இந்த நிலையை அடைவதற்கான காரணம். கடந்த 6 மாதங்களாக அனைத்து நிலைகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வர சிறப்பாக உழைத்தோம்” என்று கூறியுள்ளார்.
ப்ளாக்பெர்ரி நிறுவனம் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 2.6 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.