கோலாலம்பூர், ஜூன் 20 – நேற்று தனது துணைப் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்றும் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பேன் என்றும் டான்ஸ்ரீ மொய்தீன் யாசீன் அறிவித்திருப்பது அம்னோ கட்சியின் பின்னணியில் நடந்து வரும் பதவிப் போராட்டங்களை குறிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அம்னோவின் நடைமுறைப்படி பிரதமராக இருக்கும் ஒருவர் பதவி விலகும் போது அம்னோ துணைத் தலைவராக இருப்பவரும் துணைப் பிரதமராக இருப்பவரும் அடுத்தப் பிரதமராக பதவியேற்பார்.
தற்போது அம்னோவின் தலைவராக நஜிப் இருந்து வந்தாலும், நஜிப்பின் செல்வாக்கு பெருமளவில் சரிந்து வருகிறது என்பது கண்கூடு.
இந்நிலையில், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நஜிப் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு புதிய தலைமைத்துவத்திற்கு வழி விடவேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்தத் தேர்தலில் அம்னோவும் தேசிய முன்னணியும் வென்று மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு கருத்து அம்னோ வட்டாரங்களில் இருந்து வருகிறது.
இந்தக் கருத்துக்கு ஏற்ப ஆதரவாக செயல்படுவர்களில் முதன்மையானவர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ மொய்தீன் “நானும் நஜிப்பும் பல்வேறு விஷயங்களில் கலந்தாலோசித்து வருகிறோம். ஆனால், இதுவரை எனது பதவியைப் பற்றி நாங்கள் எதுவும் பேசியதில்லை நான் இப்போது நலமாக எனது பதவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
67 வயதான மொய்தீன் யாசின் அமைச்சரவை பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அம்னோவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அடுத்த துணைப் பிரதமராக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் துன் ஹுசேன் நியமிக்கப்படுவார் என்றும் இணைய ஊடகங்களிலும் நட்பு ஊடகங்களிலும் ஆருடங்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து, கருத்துரைத்த மொய்தீன் எனக்கும் நஜிப்புக்கும் நெருக்குமான நட்புறவு இருந்து வருகிறது. இதை சீர்குலைக்கும் வண்ணம் தேசிய முன்னணியிலும் அம்னோவிலும் உட்கட்சிப் போராட்டத்தை உருவாக்கும் வண்ணம் சில தரப்புகள் இத்தகைய வதந்திகளை பரப்பி வருகின்றன என்று கூறினார்.
நஜிப் விரும்பும் வரையிலும் எனது உடல் நலம் இடம் கொடுக்கும் வரையிலும் நான் தொடர்ந்து எனது பதவிகளிலிருந்து பணியாற்றி வருவேன் என்றும் மொய்தீன் தெரிவித்தார். அப்படியே,எதிர்காலத் திட்டங்கள் எதுவும் வைத்திருந்தால் அதை முதலில் பிரதமரிடம் பேசிவிட்டுத் தான் பின்னர் அறிவிப்பேன் என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.