நியூயார்க், ஜூன் 23 – மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வருடத்திற்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரண்டு மில்லியன் பேர் மரணமடைவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து யுனிசெப் இயக்குனரான மானுவேல் போன்டெய்ன் கூறுகையி, “ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருகி வருவதால், இந்த மிகப்பெரிய உயிரிழப்புகள் பெரிதாக வெளி உலகத்திற்கு தெரியவில்லை. குழந்தைகள் இறப்பதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் இறப்பு சதவிகிதம் தற்போது படிப்படியாக குறைந்து வந்தபோதிலும் மக்கள் தொகை உயர்வால் சராசரியாக வருடத்திற்கு இரு மில்லியன் குழந்தைகள் இறந்து வருவது குறையவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்பதில் 30 சதவிகிதம் பேர் இங்கு இறப்பது குறிப்பிடத்தக்கது. நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது 170 மில்லியன் மக்கள் தொகை இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மக்கள் தொகை வரும் 2050-ல் 450 மில்லியன்களாக அதிகரிக்ககூடும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் பசியை போக்க ஆப்பிரிக்க மக்கள் போராடும் நிலையில், நைஜிரியா உள்ளிட்ட நாடுகளில் மதத் தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை அடக்கு முறை செய்து வருவது மிகக் கொடுமையானது.