பாட்னா, ஜூன் 25 – டில்லி-திப்ரூகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் அருகே தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். டில்லி- அசாமின் திப்ரூகர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுவருகிறது.
நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டு பீகார் மாநிலம் வழியாக அசாம் நோக்கி சென்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டம் கோல்டன்கார்க் வந்த போது திடீரென தடம் புரண்டது.
இதில் ரயிலின் 11 பெட்டிகள்தண்டவாளத்தை விட்டு விலகி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், மேலும் 11 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆய்வு நடத்தியதில் இவ்விபத்துக்கு காரணம் ரயில் பாதை பழுதடைந்து இருந்தது என முதற்கட்ட தகவலில் தெரிவித்துள்ளனர். மத்தியில் பா.ஜ.தலைமையில் நரேந்திர மோடி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக சதானந்த கவுடா பொறுப்பேற்றார்.
அவர் பொருப்பேற்ற பிறகு கடந்த மே 26-ஆம் தேதி உ.பி. மாநிலம் பாஸ்தி அருகே கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் ,சரக்கு ரயிலுடன் மோதிவிபத்திற்குள்ளானதில் 20- பேர் பலியாயினர். விபத்து நடந்து ஒரு மாதம் ஆகாத நிலையில் தற்போது இரண்டாவது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.