டெல்லி, ஜூன் 25 – பா.ஜனதாவின் புதிய தலைவராக அமித் ஷா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்ற பிறகு அதன் தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பா.ஜனதாவின் தலைவர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க பா.ஜனதா கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதில், ஜெகத் பிரகாஷ் நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோரது பெயர்கள் தொடர்ச்சியாக அடிபட்டன.
முதல் சுற்றில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர், ஜெகத் பிரகாஷ் நட்டா. இமாச்சல பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மேல்-சபை நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 1991 முதல் 1994-ஆம் ஆண்டு வரை பா.ஜனதாவின் இளைஞர் அணியில் அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகளிலும் பா.ஜனதாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றி இருக்கிறார். எனவே, தொடக்கத்தில் ஜெ.பி.நட்டாவின் பெயர் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை வேறுவிதமாக மாறியிருப்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் மற்றும் நரேந்திர மோடியின் தளபதி என்று அழைக்கப்படும் அமித் ஷாவின் பெயர், தலைவர் பதவிக்கு மிகவும் உறுதியாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் 80 நாடாளுமன்ற தொகுதிகளில் 73-ல் பா.ஜனதா வெற்றி பெற்றதில் அமித் ஷாவின் பங்கு மிகப்பெரியது என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.
மேலும், அமித் ஷா பா.ஜனதாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பா.ஜனதாவின் தலைவராக அமித் ஷா நியமிக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.