ஜெனீவா, ஜூன் 25 – இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. அந்நாட்டில் நடந்த உள்நாட்டு போரில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டன.
அப்போது நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஐ.நா அமைத்துள்ளது.
10 மாதங்கள் நடைபெறும் விசாரணை முடிவில் இலங்கை போர் குற்றவாளிகளின் பட்டியல் அடங்கிய அறிக்கை ஐ.நா-விடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விசாரணை குழுவினை, நாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அந்நாட்டிற்குள் விசாரணை குழுவினர் அனுமதிக்கப்படாவிட்டாலும் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலக செய்தி தொடர்பாளர், சிரியா மற்றும் வடகொரிய நாடுகள் ஐ.நா பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும்,
ஆனால் இந்நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்து முழுமையான அறிக்கை தயாரிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளார். ஐ.நா குழுவினர் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.