Home உலகம் சிங்கப்பூர் அரசாங்க தலைமை வழக்கறிஞராக நீதிபதி வீ.கே.இராஜா நியமனம்.

சிங்கப்பூர் அரசாங்க தலைமை வழக்கறிஞராக நீதிபதி வீ.கே.இராஜா நியமனம்.

701
0
SHARE
Ad

supreme_img3 Rajaசிங்கப்பூர், ஜூன் 25 – தமிழ் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூரில் திறமை வாய்ந்த இந்தியர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவது அடிக்கடி நிகழும் ஒன்றாகும்.

அந்த வகையில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் பதவிகளுள் ஒன்றான அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (Attorney-General of Singapore) பதவிக்கு நீதிபதி வீ.கே.இராஜா (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் இனி சிங்கப்பூரின் எட்டாவது தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வருவார்.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பை சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் அலுவலகம் அறிவித்தது.

இன்று முதல் 57 வயதான இராஜாவின் பதவிக் காலம் நடப்புக்கு வரும். இதற்கு முன் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய ஸ்டீவன் சோங் என்பவரிடமிருந்து இராஜா பதவியை ஏற்றுக் கொள்வார்.

சிறுபான்மை இனத்தவருக்கான சிங்கப்பூர் அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக மூன்றாண்டு கால தவணைக்கு இராஜா, சிங்கப்பூர் அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜா, 2004 ஆண்டு முதல் நீதிபதியாகவும், சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் ஆணையர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகின்றார்.

சிங்கப்பூரின் சட்டக்கல்வி மையத்தின் தலைவராகவும், நீதிமன்ற சட்டக்கல்விக்கான வாரியத்தின் தலைவராகவும் 2010 முதல், இராஜா பணியாற்றி வருகின்றார்.

விஜயகுமார் இராஜா என்ற முழுப் பெயரைக் கொண்ட இராஜா 1982ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்தார்.

பின்னர், இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டத் துறையில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

1997ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராக இராஜா நியமிக்கப்பட்டார்.