பிரேசில், ஜூன் 26 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் ஜி பிரிவில் இன்று போர்ச்சுகல் நாட்டுடன் ஆப்பிரிக்க நாடான கானா களம் இறங்குகிறது.
ஆனால், இந்த ஆட்டத்தில் விளையாடுவதற்காக தங்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்பட வேண்டும் என்று கானா விளையாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கேட்ட பணத்தைத் தருவதற்கும் அந்தப் பணத்தை வங்கிகளின் வழியாக தொலை நகல் பணப் பறிமாற்றம் மூலம் அனுப்புவதாகவும் கானா நாட்டு அரசாங்கம் உறுதியளித்தது.
ஆனால், தங்களுக்கு அந்தப் பணம் ரொக்கமாக வழங்கப்பட வேண்டும் என்ற கானா விளையாட்டாளர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து ஏறத்தாழ 3 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ரொக்கப் பணம் ஒரு சிறப்பு விமானம் மூலம் ஏற்றப்பட்டு பிரேசிலுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த விமானம் பிரேசிலுக்கு சென்றுள்ளதாக அந்நாட்டின் துணை விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோசப் யாமின் அங்குள்ள வானொலி நிலையம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கானா அரசாங்கம் இந்தப் பணத்தை விளையாட்டாளர்களுக்கு முன்பணமாக வழங்குகிறது என்றும், பின்னர் உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடுவதற்காக கானா நாட்டிற்கு பிபா அனைத்துலக காற்பந்து சங்கம், உரிய சன்மானத்தை வழங்கும் போது, அந்த பணம் கானா நாட்டு அரசாங்கத்திற்கு திருப்பித் தரப்படும்.