கோலாலம்பூர், ஜூன் 26 – கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் குறித்த ஆரூடங்கள் நேற்றுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் நில புதிய நியமனங்களைச் செய்தார். இதன் மூலம் மசீசவும் கெராக்கானும் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றன.
ஆனால், ஒரு சில தரப்புகள் ஆரூடம் கூறியபடி ம.இ.கா அமைச்சர்கள் யாரும் மாற்றப்படவில்லை. இந்தியர் சார்பாக புதியவர்களும் யாரும் இடம்பெறவில்லை.
அதே வேளையில் வேதமூர்த்தி வகித்த துணையமைச்சர் பதவி வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.
“அமைச்சரவையில் இந்திய பிரதிநிதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி வகித்த துணை அமைச்சர் பதவிக்குப் புதிதாக ஒருவரை நியமிக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் கூறியிருக்கின்றார்.
இந்தியர்களின் விவகாரங்களை கவனிப்பதற்கு சிறப்பு அமைச்சரவை நடவடிக்கைக் குழு இருக்கிறது என்றும் இந்திய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இந்தியர்களின் பிரச்சினைகளை கவனித்துக்கொள்வர்கள் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
பிரதமர் துறையில் ஒரு சிறப்புக்குழு உருவாக்கப்பட்டு, இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அந்தக் குழு ஆழமாக கண்காணித்து வருகிறது என்று நேற்று புதிய அமைச்சர்கள் நியமனங்களை அறிவித்த பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிபிபி கட்சியைச் சேர்ந்த டத்தோ லோகபாலன் துணையமைச்சராக இருப்பதால் அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு இந்தியர் பிரதிநிதியாகக் கருதப்படுகின்றார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்களாக, துணையமைச்சர்களாக இடம் பெறுவது ஒரு புறம் இருக்க,
வேதமூர்த்தியைப் போன்று, மாற்று அணியினைச் சேர்ந்தவர்கள் அல்லது சமூக இயக்கப் போராளிகள் யாராவது இந்திய சமுதாயம் சார்பாக, வேதமூர்த்திக்கு பதிலாக துணையமைச்சராக நியமிக்கப்பட்டால், அரசாங்கக் கண்ணோட்டத்திலும், அணுகுமுறையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் –
மாற்று கருத்துகளுக்கும், புதிய அணுகுமுறைகளுக்கும் வழி பிறக்கும் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.