சிட்னி, ஜூன் 27 – மாஸ் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்பதோடு அந்த விமானம் ‘ஆட்டோ பைலட் மோட்’ இந்தியப் பெருங்கடல் வரை சென்று எரிபொருள் தீர்ந்தவுடன் கடலில் விழுந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற கருத்தை, இதற்கு முன் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத்துறை ஆய்வாளர்களும், வல்லுநர்களும் கூறிய போது, அவர்களது கருத்துகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதே வேளையில், இது போன்ற கருத்துகளை மலேசிய அரசாங்கமும், செய்தியாளர்கள் சந்திப்புகளில் தொடர்ச்சியாக மறுத்து வந்தது.
இந்நிலையில், இத்தனை நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அரசாங்கம், நேற்று 55 -பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், பயணிகள் 239 பேரும் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று எதை வைத்து ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் இறுதி முடிவிற்கு வந்தார்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Australian Transport Safety Board) தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை தேடுதல் வேட்டை நடந்த பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி புதிய முயற்சிகள் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பகுதி, ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைக்கு சுமார் 2,000 கிமீ தெற்காக இருக்கிறது. சுமார் 60,000 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்த இடத்தில் புதிய தேடல் முயற்சிகள் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.