காத்மாண்டு, ஜூன் 28 – இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏழை மக்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் தொழில் தங்கு தடை இன்றி நடைபெற்று வருகின்றது.
சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற நாடாக விளங்கி வரும் நேபாளத்தில், வீதி தோறும் சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு பலர் காத்து இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்டுக்கு 7 ஆயிரம் சிறுநீரகங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
சிறுநீரகங்களை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்று அந்நாட்டு அரசு அறிவித்து இருந்தாலும், நாளுக்கு நாள் இந்த தொழில் அதிகரித்து வருகின்றது. சர்வதேச நாடுகளில் இருந்து 300க்கும் அதிகமான சிறுநீரக தரககர்கள் காத்மாண்டு உள்ளிட்ட இடங்களில் முகாம் இட்டு அப்பாவி மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றி வருகின்றனர்.
ஒரு சிறுநீரகத்திற்கு 18 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைப்பதால், போட்டி போட்டு கொண்டு பலரும் சிறுநீரகம் கொடுக்க தயாராக உள்ளனர் என்பதும் வேதனை அளிக்கும் விஷயமாகும்.