டெஹ்ரான், ஜூன் 30 – ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே சுமார் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் வாகனங்களுக்கான வர்த்தகம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
ஈரானின் வாகன உற்பத்தி நிறுவனமான கோட்ரோ கடந்த 2007-2009 ஆம் ஆண்டு வரை 12,000-க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் அதன்பின்னர் ரஷ்யா, மாசு தொடர்பான யூரோ 4 தர நிர்ணயம் (Euro-4 emission standards) வரம்பினை கட்டாயமாக்கியதால் இந்த ஏற்றுமதி முடக்கப்பட்டது. மேலும், அணுசக்தி தொடர்பான விவாகரத்தில் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத்தில் ஈரானை புறக்கணிப்பு செய்ததாலும் கடுமையான பொருளாதார பின்னடைவு ஈரானுக்கு ஏற்பட்டது.
எனினும், சென்ற ஆண்டு நவம்பரில் ஈரானுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்பட்ட சுமூகமான போக்கு காரணமாக ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் தளர்த்திக் கொள்ளப்பட்டன. இத்தகைய சாதகமான சூழ்நிலையில் வாகனத் தயாரிப்பின் தரமும் மேம்பாடு அடைந்ததால் ஐந்து வருடங்கள் கழித்து ஈரான், ரஷ்யாவிற்கு தங்களது வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்தது.
சமண்ட், ருன்னா, செடான் போன்ற கார்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்துள்ள கோட்ரோ நிறுவனம், 2015-ம் ஆண்டுக்குள் 10,000 கார்களையாவது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவும் ஈரானுக்கு அணுமின் நிலையங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒப்பந்தங்களை தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.