நைரோபி, ஜூன் 30 – ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் தனது கென்யா சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டில் உள்ள தேசிய வன விலங்கு காப்பகத்தில் இருந்த 6 மாத சிங்க குட்டி ஒன்றை தத்தெடுத்துக் கொண்டார்.
கென்யா நாட்டில் தலை தூக்கி உள்ள தீவிரவாத செயல் குறித்தும், அங்கு நிலவும் அசாதாரண சூழல் குறித்தும் ஆராய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு நேற்று முன்தினம் சென்ற அவர் அங்குள்ள வன விலங்குகளைப் பார்வையிட்டார்.
அப்போது அவரிடம் நைரோபிய காடுகளில் தாய் சிங்கத்தால் கைவிடப்பட்டு அனாதையாக சுற்றி திரிந்த 6 மாத சிங்கக் குட்டியை எடுத்து வந்து தேசிய வனவிலங்கு காப்பகத்தில் வைத்து பராமரித்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து, அந்த சிங்கக் குட்டியை தான் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக பான் கீ மூன் விருப்பம் தெரிவித்தார். இதற்கு வனவிலங்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டதும், அந்த சிங்கக் குட்டிக்கு டுமைனி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இது குறித்து பான் கீ மூன் கூறுகையில், “மனிதர்களைப் போலவே விலங்குகளும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் உதவ வேண்டும். காடுகள் அழிக்கப்படுவது நிறுத்த பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.