கோலாலம்பூர், ஜூன் 30 – தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்று வரும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இது குறித்து நஜிப் நேற்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, “துவான் எச்ஜெ ஹாடி அவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் ஹாடியுடன், சுமார் 45 நிமிடங்கள் நஜிப் இருந்து அவரது நலம் குறித்து பேசியுள்ளார்.
அத்துடன், ஹாடியுடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தையும் நஜிப் தனது டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கடந்த மாதம் துருக்கி நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற ஹாடிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின்னர், அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் காரணமாக ஹாடி உடல்நலம் தேறி அங்கிருந்து நாடு திரும்பினார். இந்நிலையில் ஹாடி முழுவதுமாக குணமடைய அவருக்கு ஐஜேஎன் – ல் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நஜிப்பைத் தொடர்ந்து பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆகியோர் ஹாடியை நேரில் சந்தித்தனர்.