சென்னை, ஜூன் 30 – போரூர் மெளலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போரூரை அடுத்த மெளலிவாக்கம் பகுதியில் 11 மாடிக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கட்டடம் கட்டிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோகரன், அவரது மகன் முத்து ஆகியோரை போலீஸார் சம்பவம் நடந்த சனிக்கிழமையே கைது செய்து விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மேலும் மூன்று பொறியாளர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, மனோகரன், முத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடத்தின் பொறியாளர்கள் சங்கர்,துரைசிங்கம் மற்றும் கட்டடத்தின் வடிவமைப்பாளர்கள் விஜய் பர்ஹோத்ரா, வெங்கட்சுப்பிரமணியம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்களை ஸ்ரீபெரும்பூதூர் மாவட்ட நீதிபதி சந்தோஷ் வீட்டில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேலூர் சிறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 304(2), 336, 337, 338 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிகளுக்காக அழைத்து வரப்படும் தொழிலாளர்களை பணி நடைபெறும் கட்டடங்களில் தங்க வைக்கக்கூடாது என்ற விதி உள்ளன.
ஆனால் மெளலிவாக்கம் கட்டடத்தில் பணிபுரிந்தோர் அதே கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. பொறியாளர் மற்றும் கட்டடவியல் நிபுணர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.