சென்னை – கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அக்கட்டிடத்திற்கு அருகில் இருந்த 11 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து இன்று புதன்கிழமை அக்கட்டிடம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படவுள்ளது.
சென்னையில் முதன் முறையாக இது போல், வெடிகுண்டு வைத்து ஒரு கட்டிடம் தகர்க்கப்படவுள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இன்று இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் காரணமாக மவுலிவாக்கத்தில் மின்தடை செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அக்கட்டிடத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்பட்டு, அருகில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது:
“உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மவுலிவாக்கம் கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி, இன்று பகல், 2:00 மணி முதல், 4:00 மணிக்குள் கட்டடம் இடிக்கப்படும். ‘இம்ப்ளோஷியன்’ எனப்படும், உள்வெடிப்பு முறையில், வெடி மருந்துகள் பயன்படுத்தி, கட்டடம் இடிக்கப்பட உள்ளது.”
“இடிப்பு பணிகள் தொடர்பான வரைவு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, சென்னை ஐஐடி-யில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. கட்டடத்தை சுற்றி, 100 மீட்டர் தொலைவுக்குள், 74 வீடுகள், 39 கடைகள், ஐந்து சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஒரு பள்ளி உள்ளன. இவற்றில் தங்கியுள்ளவர்கள், தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு, மதனந்தபுரம் சாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்படுவர்.”
“கட்டிடம் அமைந்துள்ள சாலையில், காலை, 11:00 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படும். அதன்பின், 12:00 மணிக்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள், நான்கு பஸ்களில், தற்காலிக முகாமுக்கு அனுப்பப்படுவர். அங்கு மதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இடிப்பு பணி முடிந்தவுடன், மக்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.” என்று தெரிவித்துள்ளார்.