Home இந்தியா சென்னை கட்டிடம் சரிவு – பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!  

சென்னை கட்டிடம் சரிவு – பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!  

677
0
SHARE
Ad

chen_building_1226142fசென்னை, ஜூன் 29 – சென்னை போரூர் அருகே கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் நேற்று சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் விடிய விடிய தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மவுலிவாக்கம் என்ற பகுதியில் பிரைம் சிருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனம், 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியிருந்தது.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது. இதனால் மாலை 5.00 மணியளவில் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

11 மாடிக் கட்டிடம் ஒன்று சூறைக் காற்றையும், கடும் மழையையும் தாங்க முடியாமல் இடிந்து விழுகிறது என்றால், அது எத்தகைய பலவீனமான அடித்தளத்துடன் கட்டப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி தரும் கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இடிபாடுகளில் தொழிலாளர்கள்…

இடிந்து விழுந்த கட்டிடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களில் பெரும் பாலோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும்  கூறப்படுகிறது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வாங்குவது வழக்கம். சனிக்கிழமை வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் எல்லோரும் சம்பளம் வாங்குவதற்காக கீழ் தளத்தில் காத்திருந்தனர். அப்போதுதான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்…

03-building-collapseசம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினரும் காவல் துறையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவசர சிகிச்சை (ஆம்புலன்ஸ்) வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. மருத்துவக் குழுவினரும் விரைந்து வந்தனர்.

இருட்டி விட்டதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் மீட்புப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. மழையைப் பொருட்படுத்தாமல் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் முழுவீச்சில் இறங்கினர். அவர்களுக்கு உதவியாக காவல் துறையின், பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மீட்புப் பணிக்கு வசதியாக அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்களிலும் பெரிய கம்பங்களை நட்டு ஒளிபொருந்திய ராட்சத விளக்குகளை மீட்புக் குழுவினர் பொருத்தினர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு 8.15 மணி அளவில் 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 260 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களும் மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கினர். விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்தன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிகை 10 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும், அதனால் பலியானவர்களின் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கட்டுமான நிறுவன உரிமையாளர், மகன் கைது

இதற்கிடையே, தமிழக முதல்வரின் உத்தரவையடுத்து, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் முத்து ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.