Home நாடு “மந்திரிபெசார் பதவி யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” – காலிட்டுக்கு அன்வாரும் நெருக்குதல்

“மந்திரிபெசார் பதவி யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” – காலிட்டுக்கு அன்வாரும் நெருக்குதல்

535
0
SHARE
Ad

Anwar Ibrahimகோலாலம்பூர், ஜூன் 29 – சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக அவரது பிகேஆர் கட்சிக்குள் இருந்தும், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணியின் சக தலைவர்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் பெருகி வருகின்றன.

அவரது பல முடிவுகள் எதிர்க்கட்சியைக் கூட்டணியை பலவீனப்படுத்துவதாகவும், மக்கள் செல்வாக்கை சீர்குலைப்பதாகவும் மக்கள் கூட்டணித் தலைவர்கள் சாடி வருகின்றனர்.

இது போதாது என்று தனது சொந்த தொகுதியிலேயே, எஸ்.மாணிக்கவாசகத்திடம் தோல்வியுற்று, தனது தொகுதித் தலைவர் பதவியைக் கூட – மந்திரிபெசாராக இருந்தும் – தற்காத்துக் கொள்ள முடியாத அவல நிலைக்கு காலிட் ஆளாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலிலும் அஸ்மின் அலியை விட குறைவான வாக்குகளைப் பெற்று பின்தங்கியுள்ளார்.

ஆனால், “நான் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றாலும் சிலாங்கூர் மந்திரிபெசார் பதவியைத் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு கட்டுப்பாடும் எனக்கில்லை” என காலிட் ஆணவத்தனமாக வெளியிட்டுள்ள அறிக்கையும், சக மக்கள் கூட்டணித் தலைவர்களின் மத்தியில் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிகேஆர் கட்சித் தலைவரும், மக்கள் கூட்டணியின் தலைவருமான அன்வார் இப்ராகிமும் காலிட்டுக்கு எதிராக கருத்துரைத்துள்ளார்.

“மந்திரிபெசார் பதவி என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. பக்காத்தான் ராயாட் கூட்டணி, பிகேஆர் கட்சி ஆகியவற்றின் ஒருமித்த முடிவு மற்றும் மாநில சுல்தானின் ஒப்புதல் ஆகிய அம்சங்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்” என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அன்வார் இப்ராகிமே காலிட்டுக்கு எதிராக கருத்து கூறியிருப்பதால், இனியும் காலிட் மந்திரிபெசாராக தொடர்வது சிரமமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.