போர்ட்டோ அலெக்ரே (பிரேசில்), ஜூலை 1 – உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ள 16 நாடுகளில் ஜெர்மனிக்கும் வட ஆப்பிரிக்க நாடான அல்ஜிரியாவுக்கும் இடையிலான ஆட்டம் இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்றது.
ஆட்டம் நடைபெற்ற 90 நிமிடங்களுக்குள் எந்த குழுவும் கோல் எதுவும் அடிக்க இயலாத நிலையில், கூடுதல் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இரண்டாவது சுற்றுக்குத் தேர்வு பெற்ற 16 நாடுகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற கடுமையான போராட்டம் நடத்தி வருவதால், இன்றைய ஆட்டத்தோடு சேர்த்து இதுவரை மூன்று ஆட்டங்கள் கூடுதல் நேரம் வரை வழங்கப்படும் இழுபறி நிலைக்கு ஆளாகியுள்ளன.
கூடுதல் அரை மணி நேரம் வழங்கப்பட்டு ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளிலேயே ஜெர்மனி அல்ஜிரியாவின் தற்காப்பு வளையத்தை முறியடித்து ஒரு கோல் போட்டது.
கூடுதல் 30 நிமிடங்கள் முடிய சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் ஜெர்மனி மற்றொரு கோலைப் போட்டு தனது வெற்றியை உறுதிப்படுத்தியது.
இருப்பினும், தொடர்ந்து தளராது போராடிய அல்ஜிரியா உடனடியாக ஒரு கோலைப் போட்டது.
இருந்தாலும், அதற்குப் பின்னர் ஆட்டம் முடிவடைந்துவிட்டதால் ஜெர்மனி கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றது.
ஜெர்மனி – அல்ஜிரியா ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:
படங்கள்: EPA