பெட்டாலிங் ஜெயா, ஜூலை 01 – நியூசிலாந்து நாட்டில் 21 வயது பெண் ஒருவரை, பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியதாக அந்நாட்டில் உள்ள மலேசிய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டிலுள்ள வெலிங்டன் பகுதியில், கடந்த மே 9 -ம் தேதி, அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அந்த நபர், அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து நாட்டில் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எனவே நியூசிலாந்து பிரதமர் ஜான் கி, குற்றம் புரிந்த அந்த நபருக்கு தங்கள் நாட்டு சட்டத்தின் படி, தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சில தகவலை தெரிவிக்க, இன்று பிற்பகல் விஸ்மா புத்ராவில் மிக முக்கியமான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.