நியூயார்க், ஜூலை 1 – பிரபல ஹாலிவுட் தாரகை கிம் கர்டாஷியன் (படம்) நியூயார்க் நகரில் வைக்கப்பட்டிருந்த ஓர் ஓவியக் கண்காட்சியில் இந்துக் கடவுளின் ஓவியமாக சித்திரித்து வரையப்பட்டிருந்தது குறித்து கடும் கண்டனங்கள், அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் எழுந்துள்ளன.
பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான ‘கிப்பிங் அப் வித் கர்டாஷியன்ஸ்’ (Keeping Up with the Kardashians) என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து புகழ்பெற்றுள்ள கிம் கர்டாஷியனின் முகத்தை அடிப்படையாக வைத்து, நியூயார்க் நகரின் பிரபல வடிவமைப்பாளரும், ஓவியருமான ஹன்னா கங்கல் (Hannah Kunkle) என்ற பெண்மணி ஓவியங்களை வரைந்து கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில் 33 வயதான கிம் கர்டாஷியனை வைத்து இந்துக் கடவுள் உருவத்தையும், கிறிஸ்துவ கன்னிமேரி உருவத்தையும் கங்கல் வரைந்துள்ளார். இந்த ஓவியங்கள் இணையத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பலத்த கண்டனங்களையும் வரவழைத்துள்ளன.
இந்து பிரமுகர் ராஜன் சேத் கண்டனம்
அமெரிக்காவிலுள்ள இந்துப் பிரமுகர் ராஜன் சேத் (படம்), கிம் கர்டாஷியனின் ஓவியத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக இந்த ஓவியங்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்துலக இந்து சங்கம் என்ற அமைப்பின் தலைவரான ராஜன் சேத் அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலிருந்து விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்துக்கள் புனிதமாக கருதும் இந்துக் கடவுள்களை இதுபோன்று சிறுமைப்படுத்தும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்துக் கடவுள்களின் ஓவியங்கள் ஆலயங்களிலும், இல்லங்களிலும் வைத்து வணங்கப்படுகின்றன, அவற்றை பிரபல்யத்திற்காகவும், சர்ச்சைகளுக்காகவும் ஹாலிவுட் நட்சத்திரங்களின் முகங்களோடு இணைத்து வரைவது இந்துக்களைப் புண்படுத்தியுள்ளதாகவும், ராஜன் சேத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஓவியத்தை உருவாக்கிய ஹன்னா கங்கல் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராஜன் சேத் வலியுறுத்தியுள்ளார். கிம் கர்டாஷியனின் முகத்தை இந்துக்கடவுளாக காட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயிரம் மில்லியன் பேர் உலகமெங்கும் பின்பற்றும் உலகின் மூன்றாவது பெரிய மதமான இந்து மதம் மிக விரிவான தத்துவங்களைக் கொண்டது – இதன் அம்சங்கள் சிறுமைப்படுத்தப்படுவதும், முறையற்ற வழிகளில் பயன்படுத்தப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் ராஜன் சேத் குறிப்பிட்டுள்ளார்.மற்ற மதங்களின் உணர்வுகளை மதிக்க அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘தெ பெஷன் ஆஃப் கிம் கர்டாஷியன்’ (“The Passion of Kim Kardashian”) என்ற தலைப்பில் புருக்லின், நியூயார்க்கில், ஓவியக் கண்காட்சி ஒன்றை ஹன்னா கங்கல் அண்மையில் நடத்தினார். அதில்தான் கிம் கர்டாஷியனின் சர்ச்சைக்குரிய இந்துக்கடவுள் ஓவியம் இடம் பெற்றிருந்தது.
கிம் கர்டாஷியன் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நடிகை என்பதுடன், வடிவமைப்பாளராகவும், விளம்பர நட்சத்திரமாகவும் திகழ்கின்றார்.
சர்ச்சைக்குரிய கிம் கர்டாஷியனின் அந்த ஓவியம் இதுதான்:-