கோலாலம்பூர், ஜூலை 4 – தேசிய இந்து அறவாரியத் தலைவராக, பிரதமர் துறையில் புதிதாக பதவியேற்றுள்ள மா சியூ கியோங் (படம்) நியமிக்கப்பட்டது நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், பிரதமர் துறை துணையமைச்சராக இருந்த பி.வேதமூர்த்தி, இந்த பொறுப்பில் இருந்தார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, மா சியூ கியோங்கை பிரதமர் நஜிப் துன் ரசாக் நியமித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பினாங்கு 2 வது துணை முதல்வரும், அம்மாநில இந்து அறவாரியத் தலைவருமான பேராசிரியர் இராமசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
“இந்த நியமனம் இந்துக்களை அவமதிப்பது போன்றதாகும். இப்பொறுப்பை மேற்பார்வையிட இந்தியர்களில் தகுதியானவர்கள் யாருமில்லையா?” என்று இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து விவகாரங்களை பற்றி நன்கு அறிமுகமில்லாத சீனர் ஒருவரால் எப்படி, அப்பொறுப்பில் திறம்பட செயலாற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்து அறவாரியத்தை மேற்பார்வையிட இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தான் பொருத்தமானவராக இருப்பார் என்பதை தான் ஒப்புக்கொண்டாலும், பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில், அனைவருக்கும் பொதுவான அரசியல் சூழலே நிலவுவதால், மாவின் இனம், மதம் பற்றி இதில் சம்பந்தப்படுத்துவது சரியல்ல என்று மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ ச.வேள்பாரி கூறியுள்ளதாக தமிழ்நேசன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஒரு கிறிஸ்தவரான டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை இந்து ஆலயங்களின் மேற்பார்வையாளராக சிலாங்கூர் அரசாங்கம் நியமித்த போது பேராசிரியர் இராமசாமி ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் வேள்பாரி கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.