Home நாடு “தேசிய இந்து அறவாரியம் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்” – வேதமூர்த்தி

“தேசிய இந்து அறவாரியம் கட்டமைப்புப் பணிகள் தீவிரம்” – வேதமூர்த்தி

941
0
SHARE
Ad

புத்ராஜெயா – தேசிய இந்து அறவாரியம் அமைப்பதன் தொடர்பில் ஆலோசனைக் கூட்டங்களும் அடிப்படை பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் நலம் சார்ந்த நடவடிக்கைகள், ஆலயப் பிரச்சினைகள், மாணவர்களுக்கான சமய போதனை, அர்ச்சகர் பயிற்சி, இந்து சமய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, சமய நல்லிணக்கம், மத மாற்றம் ஆகியக் கூறுகளை ஒருங்கிணைக்கவும் சமய வளர்ச்சியை முன்னெடுக்கவும் தேசிய இந்து அறவாரியம் தேவை என்று முடிவு செய்யப்பட்டது.

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்தப் புதிய ஆட்சியில் தேசிய இந்து அறவாரியம் அமைப்பதன் தொடர்பாக முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் புத்ராஜெயாவில் நடைபெற்றது. நாட்டில் உள்ள முக்கியமான சமய அமைப்புகள், வழிபாட்டுத் தல பிரதிநிதிகள், மித்ரா பொறுப்பாளர்கள், சமய ஆசிரியர்கள், அர்ச்சகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், தேசிய இந்து அறவாரியத்திற்கான கட்டமைப்பு, எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை ஏப்ரல் 11-ஆம் நாள் பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் இரண்டாம் கட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் மித்ரா, மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய இந்து சங்கம், புக்கிட் ரோத்தான் ஸ்ரீ சக்தி தேவஸ்தானம், மலேசிய இந்து வழக்கறிஞர் சங்கம், தெலுங்கு சங்கம், சிலாங்கூர் இந்து அமைப்பு, கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம், கிள்ளான் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் ஆலயம், மலேசிய தாரா அமைப்பு, மலேசிய சைவ சமயப் பேரவை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய இந்து வாரியம் தொடர்பாக முதல் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட பதினாறு பேர் கொண்ட குழுவினர் பரிந்துரை செய்த கருத்துகள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. அவை மீண்டும் செம்மைப்படுத்தப்பட்ட பின் தேசிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின், அரசின் பார்வைக்கு இதைக்கொண்டு செல்வது என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் ஒருமுகமாக எட்டிய வரலாற்று நிகழ்வு இது என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.