கோலாலம்பூர், ஜூலை 4 – இன்றைய அவசர உலகில், பெரும்பாலானவர்கள் உணவிற்கும், உறக்கத்திற்கும் சரியான நேரம் ஒதுக்குவதே கிடையாது.
எப்போதும் கணினியையும், திறன்பேசிகளையும் கையில் வைத்துக் கொண்டு, உணவு மறந்து, உறக்கம் மறந்து நட்பு ஊடங்களில் நம் ஒட்டுமொத்த நேரத்தையும் செலவழித்து வருகின்றோம்.
இன்றைய காலத்தில், பெரும்பாலான இளைஞர்கள் நேரத்திற்கு உணவு உண்பது கிடையாது. இரவு நெடுநேரம் விழித்திருந்து, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு தங்கள் உயிருக்கு தாங்களே எமனாகிப் போகின்றனர்.
அதே போல், இன்றைய நாகரீக உலகில் நம்மில் எத்தனைப் பேர் காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்கின்றனர்?
முதலில், காலை உணவு (breakfast) என்பதன் பொருள் ‘விரதத்தை கலைத்தல்’ என்பதாகும். அதாவது ‘Breaking fast’ என்பதன் சுருக்கமே ‘Breakfast’ என்று கூறப்படுகின்றது.
இரவில் சுமார் 8 முதல் 10 மணி நேரங்கள் உறங்கி எழும் போது நமது வயிற்றில் முதல் நாள் இரவு சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் செரிமானம் ஆகி காலியாக இருக்கும்.
அந்த நேரத்தில், நமது குடல் மற்றும் செரிமான பகுதிகள் அனைத்தும் முழுமையான இயக்கத்தில் இருக்காது. எனவே காலை உணவாக குளிர்ச்சியான பழச்சாறு, நீராகாரம், எளிதில் செரிமானமாகும் உணவுகள் போன்றவற்றை உட்கொண்டு சிறிது சிறிதாகத் தான் அதை இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக காலை வேளையில் அதிகக் கொழுப்புள்ள எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
எடுத்த எடுப்பிலேயே, கொழுப்பு உணவுகளை உட்கொண்டு உடலுக்கு கேடு விளைவிப்பதை விட, நன்கு கடைந்த சத்துள்ள மோர் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை அடையலாம்.
மோர் அருந்துவதால் பல நன்மைகள் உண்டாகும் என்பதனை பலரும் அறிவதில்லை. ஜீரணசக்திக்கு ஏற்றது மோர். மேலும், வயிற்று உபாதைகளுக்கும், வயிற்று உப்புசத்திற்கும், வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கும் மோர் சிறந்த பாணம்.
அவ்வகையில் மசாலா மோர் காலை உணவிற்கு சிறந்தப் பானமாக திகழ்கின்றது. மசாலா மோர் செய்வதன் வழிமுறைகளை கீழே காணலாம்:-
தேவையான பொருட்கள்:-
கடைந்த தயிர்-1 கப், தண்ணீர்-3 கப், அரைப்பதற்கு: நெல்லிக்காய்1, பச்சைமிள்காய்-1, மாங்காய்-கால், கறிவேப்பிலை-2,
இஞ்சி- ஒரு சிறு துண்டு, கொத்துமல்லி- அரைக்கட்டு, உப்பு, பெருங்காயத்தூள், எலுமிச்சை – சிறியது
செய்முறை:-
அரைப்பதற்கு உரிய பொருட்களை சிறிது தண்ணீர்விட்டு அரைத்தப் பின்பு உப்பு, பெருங்காயத்தூள், தயிர், தண்ணீர்விட்டு நன்கு அரைத்து பின் வடிகட்டவும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவிதமான வைட்டமின் சத்துக்களும் இதில் சேர்வதால் மிக சுறுசுறுப்பாக நாள் முழுவது இயங்க இந்த மசாலா மோர் உதவும்.
ஆகவே, செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவருமே காலை உணவாக இந்த மசாலா மோரை அருந்தி ஆரோக்கியமாக வாழலாம்.