பிரேசில், ஜூலை 5 – ஐரோப்பிய காற்பந்து அரங்கில் முக்கிய நாடாக நெதர்லாந்து திகழ்ந்தாலும் – பல உலகப் புகழ்பெற்ற விளையாட்டாளர்களை இதுவரை அந்த நாடு தந்திருந்தாலும் – காற்பந்து உலகின் உச்ச பரிசாகக் கருதப்படும் உலகக் கிண்ணத்தை மட்டும் இதுவரை அந்த நாடு வென்றதில்லை.
1970, 1974, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்தாலும் அந்த ஆட்டங்களிலெல்லாம் அந்த நாடு தோல்வியுற்று கிண்ணத்தைத் தன் நாட்டுக்கு எடுத்துச் செல்லும் கலைந்த கனவுகளோடு வெளியேறியது.
2010இல் இறுதி ஆட்டம் வரை வந்த நெதர்லாந்து…
கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டோடு மோதியபோது நெதர்லாந்து வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் அந்த ஆட்டத்திலும் அது தோல்வி கண்டது.
இருந்தாலும் இந்த முறை தான் இடம்பெற்ற பி (B) பிரிவில் ஸ்பெயின் நாட்டோடு சேர்ந்து இடம்பெற்ற நெதர்லாந்து குழு தனது 2010 ஆம் ஆண்டுக்கான தோல்விக்கு பழிவாங்கும் விதமாக ஸ்பெயினை 5-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால்…
இதன்காரணமா, ஸ்பெயின் முதல் சுற்று ஆட்டங்களிலேயே உலகக் கிண்ண போட்டிகளிலிருந்து தோல்வி முகத்தோடு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.
இரண்டாம் சுற்றுக்கு தேர்வு பெற்ற 16 நாடுகளில் ஒன்றாக வெற்றி பெற்ற நெதர்லாந்து, கிரீஸ் நாட்டை பெனால்டி கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
பிரேசிலின் சல்வடோர் நகரில் இன்று கோஸ்டாரிக்கா நாட்டுடன் நெதர்லாந்து கால் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றது. இந்த ஆட்டம் மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 4.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
வான் பெர்சியின் தலைமையில்…
சிறந்த முன்னணி ஆட்டக்காரரான ராபின் வான் பெர்ஸியின் தலைமையில் களமிறங்கும் நெதர்லாந்து குழுவுக்கு பயிற்சியாளராக லூயிஸ் வான் ஹால் பணியாற்றுகின்றார்.
நெதர்லாந்து குழுவுக்கு தலைமையேற்கும் வான் பெர்சி…
தென் அமெரிக்கா நாடான கோஸ்டாரிக்காவும் இதற்கு முன்னால் மிகப்பெரிய அளவில் உலகக் கிண்ண போட்டிகளில் எந்த வெற்றியையும் சந்தித்ததில்லை. இந்த முறை காலிறுதி ஆட்டம் வரை வருவதுதான் காற்பந்து வரலாற்றில் அவர்களின் அதிகபட்ச வெற்றியாகும்.
இந்த இரண்டு நாடுகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும். இதனால் கோஸ்டாரிக்காவும் நெதர்லாந்து குழுவுக்கு கடுமையான போட்டியை வழங்கி சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றால், இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டமான அர்ஜெண்டினா பெல்ஜியம் குழுக்களுக்கிடையிலான ஆட்டத்தில் வெற்றிபெறும் குழுவோடு அரையிறுதியாட்டத்தில் நெதர்லாந்து மோதும் நிலைமை ஏற்படும்.
2010இல் இறுதி ஆட்டத்தின் வரை வந்து ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்ற நெதர்லாந்து, இந்த மீண்டும் அதே போன்று இறுதிச் சுற்று வரை செல்ல முடியுமா – கிண்ணத்தை வெல்ல முடியுமா என்று எழுந்துள்ள கேள்விக்கு இன்று முதல் கட்ட விடை கிடைத்து விடும்.
-இரா.முத்தரசன்