சென்னை, ஜூலை 7 – என்ன காரணத்தாலோ அதிமுக ஆட்சி என்றாலே அகால மரணங்கள் நிகழ்வதும், அதில் பலர் மாண்டு போவதும் தொடர்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து, 61 பேர் மாண்டு மடிந்த துயரம் நம் இதயங்களை விட்டு அகலாத நிலையிலேயே,
செங்குன்றம் அருகே தனியார் குளிர்பான நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்பட தொழிலாளர்கள் 11 பேர் பலியான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
என்ன காரணத்தாலோ, அ.தி.மு.க. ஆட்சி என்றாலே இவ்வாறு அகால மரணங்கள் அடிக்கடி நிகழ்வதும், அதில் பல பேர் மாண்டு மடிவதும் தொடர்ந்து வருகின்றது. சுவர் இடிந்து விழுந்து மறைந்த 11 பேர்களின் குடும்பத்திற்கும் ஆறுதலைக் கூறுகிறேன்.
மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் சென்று நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்களக் கடற்படையினர் அங்கே வந்து சுற்றி வளைத்து, 5 படகுகளையும், 20 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இது போன்ற கொடுமைகள் அடிக்கடி நிகழ்வதும், உடனே நம்முடைய முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் தான் தொடர்ந்து நடக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது நின்றபாடில்லை.
எனவே இந்திய மீனவர்களைக் காப்பாற்றவும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலையாகி தமிழகம் திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.