சென்னை, ஜூலை 7 – இசை கலைஞர்கள் பிறக்கிறார்கள், உருவாக்கப்படுவதில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். சென்னையில் நேற்று நடந்த இசை விழாவில் அவர் பேசியதாவது, “சங்கீதம் என்பது உன்னதமானது. நாம் பாடி முடித்ததும் அது மறைந்து போகக் கூடிய விஷயமல்ல”.
“சங்கீதம் எப்போதும் காற்றோடு கலந்திருக்கக் கூடியது. அதனால்தான் நம் முன்னோர்கள் பாடிச் சென்ற இசை நாம் பாடும்போதும், இசையமைக்கும் போதும் உடனிருக்கிறது.
சங்கீதம் மனிதனின் மனதை தூய்மைப்படுத்தக் கூடியது. நான் எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் தெய்வீகத்தை உணர்வதில்லை. ஆனால் எங்கு சென்றாலும், நம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் மனதில் ஓர் அதிர்வு வருவதை உணர்வேன்.
இசைக்கு அதிபதியான சரஸ்வதி உலகெங்கும் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை சரஸ்வதி தேவி நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறாள். ஏனென்றால் பாரம்பரிய இசை நம் நாட்டுக்கானது. இப்போது நம்மிடையே 64 நாயன்மார்களோ, இசையை தந்த மும்மூர்த்திகளோ இல்லை.
ஆனால் அவர்கள் இல்லாத வெற்றிடத்தை, உலகம் முழுவதும் சென்று நம் பாரம்பரிய இசையை இப்போதுள்ள கலைஞர்கள் பரப்பி வருகின்றனர்.
வயலின் இசைக் கலைஞர் டாக்டர் எல்.சுப்ரமணியன் உலகெங்கும் உள்ள முக்கியமான அரங்குகளிலும், முக்கியமான இசைக் குழுவுடனும் இணைந்து நம் இசையை பரப்பியுள்ளார்.
இப்படி நாம் நம்முடைய இசையை பரப்ப வேண்டுமென்றால் வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் கூடிய இசைப் பயிற்சி அவசியம்” என்றார் இளையராஜா.