சென்னை, ஜூலை 7 – ‘சூப்பர் ஸ்டார்’ என்பது மிகப் பெரிய அங்கீகாரம் என்றும், அதற்காக நான் ஆசைப்படவில்லை என்றும் நடிகர் விஜய் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழகத்தின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்பது பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.
பத்திரிகை ஒன்று வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ விஜய் என்று அறிவிக்கவே பற்றிகொண்டது பரபரப்பு. அஜீத் ரசிகர்கள் சண்டை போட்டு தாக்க, கொடுத்த பட்டத்தை திரும்ப வாங்கிவிடலாமா என்று கூட யோசிக்கும் அளவிற்கு போனது அந்த பத்திரிகை.
இந்த செய்திகளைப் பார்த்த விஜய், ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை என்று கூறியுள்ளார். அதுவும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் முன்னிலையில் இதனைக் கூறியுள்ளார்.
“விஜய் அவார்ட்ஸ்” விருதுகள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஷாருக்கான், கமல்ஹாசன், விஜய், சூர்யா, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
விருதுகள் வழங்கும் பட்டியலில் “ரசிகர்களின் விருப்பத்தற்குரிய நடிகர்” விருது, நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்க்கு இவ்விருதினை வழங்கினார்.
விருது பெற்றவுடன் நடிகர் விஜய் பேசும்போது, “விஜய் டி.வி மகேந்திரன் என்னைச் சந்தித்து நீங்கள் வர வேண்டும் என்று கூறினார். நீங்கள் விருதுக் கொடுத்தாலும் எனக்கு வர விருப்பமில்லை என்றேன்.
பிறகு, உங்களுக்கு ரசிகர்களின் விருப்பத்தற்குரிய நடிகர் விருதினை ‘தலைவா’ படத்திற்காக வழங்க இருக்கிறோம் என்று கூறினார். ‘தலைவா’ படத்திற்காக மட்டுமே இங்கு கலந்து கொள்கிறேன்.
மக்கள்தான் ஒரு படம் நல்ல இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். சூழ்நிலைகள் அல்ல. சூழ்நிலைகள் காரணமாக மட்டுமே தலைவா படம் சரியா போகவில்லை. இந்த விருது எனக்கு கிடைத்ததிற்கு முக்கிய காரணம் ‘தலைவா’ படம் தான்” என்றார்.
‘தலைவா’ படம் நன்றாக போயிருந்தால் இந்த விருதினை வாங்க வந்திருக்க மாட்டேன். எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் ‘தலைவா’. நல்ல போயிருக்க வேண்டிய படம் என்றும் கூறினார் விஜய்.
“உங்களுக்குப் பிடித்தது ‘இளைய தளபதி’ பட்டமா அல்லது ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டமா” என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய், “எனக்கு முதலில் கொடுத்த பட்டமே போதும்.
‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் என்பது மிகப் பெரிய அங்கீகாரம் என்றார்.
சினிமாவில் எனக்கும் ஓர் இடம் வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டனே தவிர, கண்டிப்பாக அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு ஆசைப்படவில்லை.
என்னை விட தகுதியும் திறமையும் இருக்கும் பல பேர் கோல் போஸ்டுக்கு அருகில் தயாராக இருக்கிறார்கள்.வாய்ப்பும் சூழ்நிலையும் வரும்போது அவர்களும் கோல் போடுவார்கள்.
ஆனால், கோல் போடும்போது பந்துமட்டுமே உள்ளே செல்ல வேண்டுமே தவிர அவர்களும் சேர்ந்து உள்ளே போகக் கூடாது. தலைக்கு கிரீடம் வரும் போது அதன் கனத்தை தலைக்கு உள்ளே எடுத்துச் செல்ல கூடாது” என்றும் கூறினார்.
என்னை விட நன்றாக நடிக்கிறவங்க, அழகா இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. எப்பவுமே நான் ஒரு சாதாரணமான ஆள்தான்” என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.