கோலாலம்பூர், ஜூலை 8 – உலகின் முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், பயனர்களின் அனுமதி இல்லாமல் மேற்கொண்ட உளவியல் பரிசோதனை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், வழக்குகளும் பாயத் தொடங்கி உள்ளன.
உலக அளவில் சமூக ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், அவ்வபோது பல பரிசோதனை முயற்சிகளில் இறங்குவது வழக்கம். அவ்வாறு பேஸ்புக் சமீபத்தில் பயனர்களின் மனநிலையில் ஏற்படும் தாக்கத்தை அறிவதற்காக, ஒரு பரிசோதனையை ரகசியமாக மேற்கொண்டது. இந்த சோதனையின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பேஸ்புக் பயனர்களின் பக்கத்தில் வெளியாகும் ‘நியூஸ் ஃபீட்’ (News Feed) திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நியூஸ் ஃபீடில் செய்திகள் நல்ல செய்தியாகவோ அல்லது கெட்ட செய்தியாகவோ இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
நியூஸ் ஃபீடினை பார்க்கும் பயனர்களின் மனநிலை அந்த குறிப்பிட்ட செய்திகளினால் பாதிக்கப்படுகின்றதா என்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். ஒருவேளை பயனர்கள் அந்த செய்திகளால் பாதிக்கப்பட்டால், அதன் பிறகு அவர்கள் வெளியிடும் பதிவும் அந்த செய்தியை சார்ந்ததாகவே உள்ளதா என பேஸ்புக் ஆராய்ந்தது. இந்த பரிசோதனை முயற்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சுமார் ஏழு லட்சம் பயனர்கள் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக்கின் இந்த முயற்சிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்க, இது குறித்து அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் கூறுகையில், “இந்த ரகசிய சோதனைக்காக மன்னிப்பு கோரவில்லை. இது போன்ற சோதனைகளை அனைத்து நிறுவனங்களும் நடத்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இது தொடர்பாக தகவல் தெரிவித்த விதம் தான் மோசமாக அமைந்து விட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் இந்தச் சோதனையின் நோக்கம் பயனர்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவது தான், யாரையும் வருத்தத்திற்கு உள்ளாக்குவதற்காக அல்ல என்றும் கூறியுள்ளார்.