கொழும்பு, ஜூலை 8 – இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மறு சீரமைப்பு பணிகளுக்கு உதவி செய்ய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் சிறப்புத் தூதராக துணை அதிபர் சிரில் ராமபோசா, இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்தடைந்தார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009-ம் ஆண்டுடன் முற்று பெற்றாலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீரமைப்பு பணிகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன.
உலக நாடுகளின் கடும் கண்டனங்களுக்கும், ஐ.நாவின் அறிக்கைகளுக்கும் அசைந்து கொடுக்காத இலங்கை அரசு பணிகளை, பல்வேறு காரணங்களைக் காட்டி தாமதப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில், தமிழ் ஈழப் பிரச்சனையில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் தென் ஆப்பிரிக்க அரசின் சிறப்பு துணை அதிபர் இலங்கைக்கு வருகை புரிந்துள்ளதால், இலங்கை அதிபர் ராஜபட்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அவரை சந்திக்க உள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் துறையின் துணை அமைச்சராக இருந்த இப்ராஹிம் இப்ராஹிம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கைக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது