சிங்கப்பூர், ஜூலை 8 – கம்போடியாவில் மலையேற்றத்திற்கு சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிங்கப்பூர் பிரஜை சஞ்சை இராதாகிருஷ்ணன் (வயது 26), கம்போடியா காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
“மலையேறுவதில் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினரை அனுப்பி தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால், இறுதியாக இராதாகிருஷ்ணனை மலையடிவாரத்தில் கண்டுபிடித்தோம். அவர் பாதுகாப்பாக உள்ளார்” என்று கம்போடியா ப்னோம் ஔரல் காவல்துறை அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் தேசிய கல்வி நிறுவனத்தில் (National Institute of Education) படிப்பை முடித்து, அங்கேயே பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் சஞ்சை, மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
கடந்த வாரம், 1,813 மீட்டர் உயரம் கொண்ட கம்போடியாவின் மிக உயரமான மலையான ப்னோம் ஆரல் (Phnom Aural) -க்கு தனியாக பயணம் மேற்கொண்ட சஞ்சை, கடந்த ஜூலை 3 -ம் தேதி நாடு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் முன்பதிவு செய்த விமானத்தை தவறவிட்டு, அதன் பின்னர் குடும்பத்தாருடன் தொடர்பே இல்லாமல் போனதால், அவரை தேடி கண்டுபிடித்துத் தருமாறு கம்போடியா அரசாங்கத்திடம், சிங்கப்பூர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.