பெய்ஜிங், ஜூலை 10 – ஆப்பிளின் மிக முக்கிய செயலியான ‘சிரி’ (siri)-ன் காப்புரிமையை, சீனாவின் தொழில்நுட்ப நிறுவனத்திடம் இழப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சிரி செயலி, பயனர்களின் தனிப்பட்ட உதவியாளர் போல் செயல்படும் ஒரு சிறப்பான செயலியாகும். பயனர்களின் அலுவலக குறிப்புகள், அறிவு சார் தேடல்கள் உட்பட பல வசதிகளை, இந்த செயலியானது செயல்படுத்தவல்லது.
இந்த செயலியின் காப்புரிமை தொடர்பாக ஆப்பிள் மற்றும் சீனாவின் ஸிஜென் டெக்னாலஜி நிறுவனத்திற்கும் இடையேயான வழக்கில் ஆப்பிளுக்கு எதிராக தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய பெய்ஜிங் முதல் இடைநிலை நீதிமன்றம், ஸிஜென் டெக்னாலஜி நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பினை வழங்கி உள்ளது.
இது குறித்து ஆப்பிளின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆப்பிள் சிரியில், அந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வில்லை. எனினும், அந்நிறுவனம் பற்றி முன்பே அறிந்திருந்தால் இத்தகைய சர்ச்சை ஏற்பட்டு இருக்காது” என்று கூறியுள்ளார்.
தற்சமயம், ஆப்பிள் இந்த காப்புரிமை விவகாரத்தை, பெய்ஜிங் மக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்வதற்கு முடிவு செய்துள்ளது.
ஸிஜென் டெக்னாலஜி நிறுவனம் சிரி விவகாரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.