கோலாலம்பூர், ஜூலை 11 – மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், எக்கனாமி (சாதாரண கட்டண) வகுப்பு பயணிகளுக்கு, ‘பயண முன் ஆயத்த பரிசோதனை’ (Check-in) மற்றும் உடமைகள் மற்றும் பைகளை எடுத்துச் செல்லும் முறையில் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எதிர்வரும் 15-ம் தேதி முதல் எக்கனாமி வகுப்பு பயணிகள் தங்கள் பயண முன் ஆயத்த பரிசோதனைகள் மற்றும் உடமைகள், பைகளை எடுத்துச் செல்லுதல் போன்றவற்றினை தாங்களே செய்து கொள்ள வேண்டும்” என்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் தங்கள் பயண முன் ஆயத்த பரிசோதனைகள் உட்பட, குறிப்பிட்ட சில சேவைகளை தங்கள் திறன்பேசிகள் மூலமாகவோ அல்லது கேஎல் விமான நிலையத்தில் உள்ள ‘சுய சேவை மையத்தின்’ (self-service kiosk) மூலமாகவோ நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்த புதிய முறையானது கடந்த 2011-ம் ஆண்டும், உள்நாட்டு விமான போக்குவரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இது குறித்து மாஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் இயக்குநர் டத்தோ சல்லேஅஹ்மத் தப்ரானி கூறுகையில், “இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் தங்கள் நேரத்தை மிகச் சரியாக நிர்வகிக்க முடியும். இது அவர்களுக்கு சிறப்பானதொரு அனுபவத்தை ஏற்படுத்தலாம். மேலும், இந்த முறையில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது” என்று கூறியுள்ளார்.