பெய்ஜிங், ஜூலை 12 – சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற திட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டது.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற திட்டத்தி கட்டாயமாக நடை முறைப்படுத்தியது சீனா அரசு. மேலும், அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இந்த கடுமையான நடவடிக்கைகளால் அங்கு கடந்த சில ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அனால் அதேவேளையில் மனித வளம் மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகின்றது. பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்க்கும் நடைமுறை அங்கு அதிகரித்து விட்டது.
எனவே இந்த நிலையை சீரமைக்க ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வை ஏற்படுத்த அந்நாட்டு அரசு முடிவு எடுத்து அதற்கான ஒப்புதலை கடந்த டிசம்பரில் அளித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 600 தம்பதிகள், 2–வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.