பிரேசிலியா (பிரேசில்), ஜூலை 12 – ஜெர்மனியுடனான அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் தோல்வி குறித்து தகவல் ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதி ஓய்ந்துவிட்டன.
இணையத் தளங்களில் எண்ணிலடங்கா கிண்டல்-கேலிகள் நிறைந்த படங்களும் ஓவியங்களும் வாரி இறைக்கப்பட்டுவிட்டன.
நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரேசில் பயிற்சியாளர் பிலிப் சோலாரியுடன் பிரேசில் குழுவின் தலைமை விளையாட்டாளர் தியாகோ சில்வா…
பிரேசில் இரசிகைகளின் கவர்ச்சிப் படங்களையும், பிரேசில் இரசிகர்களின் வித்தியாச முக ஒப்பனைகளைக் கொண்ட படங்களையும் மட்டுமே வெளியிட்டு வந்த தகவல் ஊடகங்கள் முதல் முறையாக,
பிரேசில் காற்பந்து இரசிகர்களின் அதிர்ச்சி, ஏமாற்றம், கண்ணீர், கவலை, என சோகத்தின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும் படக் காட்சிகளின் கோர்வைகளை வெளியிட்டு, பிரேசிலில் தோல்வியை விரிவாக எடுத்துக் காட்டிவிட்டன.
இன்று இதற்கெல்லாம், பிரேசில் பதில் சொல்ல வேண்டிய நாள்.
பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்திற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து வீரர்கள்
ஆம்! உலகக் கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது இடத்திற்கான போட்டிக்கு இன்று நெதர்லாந்துடன் களம் இறங்கும் பிரேசில் தனது தன்மானத்தை, இழந்து போன மானத்தை, மீண்டும் தங்களின் தாய் மண்ணில் நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிரேசில் பயிற்சியாளர், பிலிப் சோலாரி, ஜெர்மனியுடன் 7-1 கோல் கணக்கில் பிரேசில் தோல்வியடைந்த நாள்தான் தனது வாழ்நாளில் மிக மோசமான நாள் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இன்று நெதர்லாந்தை வென்று காட்டுவதன் மூலம் காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் தங்களுக்கிருக்கும் ஆதிக்கத்தையும், பெருமையையும் மீண்டும் உலகுக்கு எடுத்துக் காட்ட பிரேசில் குழுவுக்கு மட்டுமின்றி பயிற்சியாளர் சோலாரிக்கும் ஒரு வாய்ப்பு இன்றைய ஆட்டம்.
நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் வான் கால் தன் குழுவினருக்கு பயிற்சி தருகின்றார்
நெதர்லாந்தும் கடுமையான போராட்டம் நடத்தும்
ஆனால்,அரையிறுதி போட்டியில் அற்புதமாக விளையாடியும், அதிர்ஷ்டமில்லாத காரணத்தால், பினால்டி கோல்களில், இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை அர்ஜெண்டினாவிடம் நூலிழையில் இழந்த நெதர்லாந்தும் மூன்றாவது இடத்தைக் கைப்பற்ற கடுமையாகப் போராடும்.
மூன்றாவது இடத்திற்கான போட்டிதான் என்றாலும், பிரேசில் தனது தன்மானத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில் போராடும் என்பதால், பரபரப்பான – விறுவிறுப்பான ஆட்டமாக இன்றைய ஆட்டம் இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்