பிரேசிலியா, ஜூலை 13 – உலகக் கிண்ணப் போட்டிகளை பல்லாண்டுகளாக பின்தொடர்பவர்களுக்கு தெரியும் – எப்போதுமே மூன்றாவது இடத்திற்கான போட்டி அவ்வளவாக காற்பந்து இரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தாது.
அரை இறுதிப் போட்டிகள் முடிந்ததும், இறுதிப் போட்டியில்தான் அனைவரும் குறியாக இருப்பார்கள்.
ஆனால், ஜெர்மனியிடம் பிரேசில் பெற்ற 7-1 கோல் கணக்கிலான தோல்வியைத் தொடர்ந்து, இன்றைய மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பிரேசில் குழு இதிலாவது வெற்றி பெற்று, நாட்டின் மானத்தைக் காப்பாற்றுமா என்ற பிரேசில் மக்களின் எதிர்பார்ப்புதான் அதற்கான காரணம்.
ஆனால் இந்த ஆட்டத்திலும் பிரேசில் குழு ஏமாற்றத்தையே தந்தது.
முதல் பாதி ஆட்டம்
மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 4.00 மணிக்கு பிரேசிலின், பிரேசிலியா நகரில் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில், முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது நெதர்லாந்து 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் அளவளாவிக் கொள்ளும் பிரேசில் பயிற்சியாளர் சோலாரி – நெதர்லாந்து பயிற்சியாளர் வான் கால்
நெதர்லாந்தின் அர்ஜன் ராபின் திடலின் பினால்டி பிரதேசத்தில், பிரேசில் விளையாட்டாளர் டி.சில்வாவால் கீழே இழுத்துத் தள்ளப்பட, நெதர்லாந்துக்கு பினால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை நெதர்லாந்து தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) வான் பெர்சி கோலாக்கினார்.
தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நெதர்லாந்து மற்றொரு கோலை போட்டது 2-0 என்ற நிலையில் முன்னணிக்கு வந்தது.
பிரேசில் ஆட்டம் மோசம் இல்லையென்றாலும் – கோல் அடிக்க பல தடவைகள் அவர்கள் முயன்றாலும் – முதல் பாதி ஆட்டம் முடிய பிரேசில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறியது.
இரண்டாவது பாதி ஆட்டம்
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறின. இரண்டு குழுக்களும் பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அவை கோலாக பரிணமிக்கவில்லை.
ஆனால் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த வேளையில் நெதர்லாந்து மற்றொரு கோலைப் போட்டு, பிரேசிலின் கனவுகளுக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைத்தது.
இறுதியில் 3-0 கோல் கணக்கில் நெதர்லாந்து பிரேசிலை வெற்றி கொண்டு இந்த முறை உலகக் கிண்ணப் போட்டியில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது.
படங்கள்: EPA