லண்டன், ஜூலை 14 – உலக அளவில் நிகழ்த்தப்பட்ட பெரும் தொழில்நுட்ப புரட்சிகளில் பெரும் பங்கு கூகுள் நிறுவனத்தையே சாரும். அந்த வகையில் கண் கண்ணாடிகளில் அறிவியலைப் புகுத்தி கூகுள் உருவாக்கிய ‘கூகுள் கண்ணாடிகள்’ (Google Glass) பெரும் வரவேற்பை பெற்றன.
தற்போது அந்த கண்ணாடிகளில் மற்றுமொரு புதுமையாய், எண்ண ஓட்டங்களினால் இயக்கக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
லண்டனை சேர்ந்த ‘திஸ் ப்ளேஸ்’ (This Place) எனும் நிறுவனம் கூகுள் கண்ணாடிகளுக்காக உருவாக்கியுள்ள ‘மைண்ட் ஆர்டிஆர்’ (MindRDR) எனும் செயலியின் மூலமாக கூகுள் கண்ணாடிகளை எண்ண ஓட்டங்களினால் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி திஸ் பிளேஸ் நிறுவனம் கூறுகையில், “இந்த புதிய செயலி, பயனர்களின் எண்ண ஓட்டங்களை கணிக்க வல்லது. கூகுள் கண்ணாடிகளை உற்று நோக்கும் போது, குறிப்பிட்ட சில மணித் துளிகளில் கண்ணாடியின் மானிடரில், வெள்ளைக் கோடுகள் கடக்கும், அப்போது பயனர்கள் கூகுள் கண்ணாடிகளைக் கொண்டு புகைப்படம் எடுக்க நினைத்தால், கண்ணாடிகள் பயனர்கள் உற்று நோக்கும் பொருளினை புகைப்படம் எடுக்கும்” என்று கூறியுள்ளது.
மேலும், எடுக்கப்படும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யவும் முடியும் என அறிவித்துள்ளது.
இந்த புதிய வசதி கடுமையான உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி பற்றி கூகுள் நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதலை அளிக்கும் என்று கூறப்படுகின்றது.