பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 – புலாவ் ராவா தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த எஸ்டோனியன் அழகி ரெஜினா சூசலுவின் உடலை அவரது சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல, அவரது நண்பர்களால் நிதி திரட்டப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிதி கோலாலம்பூரில் நடத்தப்படவிருக்கும் ரெஜினாவின் நினைவாஞ்சலி நிகழ்வில் பயன்படுத்தப்படும் என்று ரெஜினாவின் தோழி, ‘இன் லவிங் மெமரி ஆஃப் ரெஜினா சூசலு 7/டிசம்பர்/1984 – 1/ஜூலை/2014’ என்ற பேஸ்புக் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அகப்பக்கத்தின் உரிமையாளர், “நாங்கள் எஸ்தோனியாவில் இருக்கும் ரெஜினாவின் குடும்பத்தினருக்காக நிதி திரட்ட முயற்சி செய்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரெஜினாவின் நண்பர்கள் இவ்வழக்கை சுருக்கமாக நடந்துவதற்காக ஒரு வழக்கறிஞரை தேடிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்தோனியாவிற்கான மலேசியா தூதர் டத்தோ ஹர்பன் சிங்,“ரெஜினாவின் உடலை எஸ்தோனியாவிற்கு எடுத்துச் செல்ல அதிக செலவாகும் என்பதால் அவரை மலேசியாவிலேயே தகனம் செய்யுங்கள்”என்று ரெஜினாவின் குடும்பத்தினருக்கு ஆலோசனைக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஒரு வெளிநாட்டு விமான நிறுவனம், 120,000 ரிங்கிட் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரெஜினா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இருவர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஜோகூர் குற்றப்புலனாய்வு துறை தலைமை அதிகாரி டத்தோ ஹஸ்னான் ஹசான் கூறுகையில், “அவர்கள் இருவரும், சூசலுவின் கொலை வழக்கு சம்பந்தமாக அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்பட்டார்கள். மற்ற ஐவரும் மேற்கொண்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்”என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் விடுவிக்கப்பட்ட இருவரில் சூசலுவின் காதலர் துங்கு அலாங் ரேஸா இப்ராகிம் உள்ளாரா? என்பது கேள்விக் குறியே. அதைப் பற்றிய தகவல் அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
ஆரம்பக்கட்ட விசாரணையில், கடந்த ஜூலை 1 -ம் தேதி தன் காதலனுடன் புலாவ் ராவா தீவிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த சூசலு, கடலில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டார்.
பின்னர் காவல் துறையினர் இவ்வழக்கை 302 -ன் சட்டப்பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவுச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்ட ரெஜினாவின் காதலரான ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு ரெஸா துங்கு இப்ராகிம், கடந்த ஜனவரி மாதம் 11 -ம் தேதி, தாமான் சென்சுரி அருகிலுள்ள ஜாலான் செரிகாலா அருகே 5.84 கிராம் அளவிலான கேனபிஸ் என்ற போதை வஸ்துவை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, கடந்த மே மாதம் நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.