Home நாடு அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாரா? அஸ்மின் அலியின் அபார அரசியல் வளர்ச்சி!

அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாரா? அஸ்மின் அலியின் அபார அரசியல் வளர்ச்சி!

541
0
SHARE
Ad

Azmin-Ali1கோலாலம்பூர், ஜூலை 16 – அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாராக பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி ஹரிராயா பெருநாளுக்குப் பின்னர் பதவி ஏற்பார் என செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராகவும் அவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தல்களின் ஆரம்ப கட்ட முடிவுகளும் அதைத்தான் காட்டுகின்றன.

திரும்பிப் பார்க்கும்போது – மலாய்க்காரர்களுக்கே உரிய எந்தவித குடும்ப அரசியல் பின்னணியும் இல்லாமல் – அரசியலில் இந்த அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கும் அஸ்மின் அலியின் அரசியல் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகும்.

#TamilSchoolmychoice

அதுவும், எதிர்க்கட்சி அரசியலில் இந்த அளவுக்கு ஒருவர் உயர்வது என்பது எளிதான ஒன்றல்ல.

அன்வாரின் செயலாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி – பின்னர் அவருக்காக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி – அன்வார் சிறைப்பட்ட காலத்தில் அவரது அரசியல் போராட்டத்தை முன்னின்று கொண்டு சென்று – பிகேஆர் கட்சியில் இரத்தமும் சதையுமாக இரண்டறக் கலந்து விட்டவர் அஸ்மின்.

அதிலும் அண்மையக் காலத்தில் அவரது அரசியல் குரு அன்வார் இப்ராகிமின் எதிர்ப்புகளையும் மீறி –

அஸ்மின் அலியின் பிகேஆர் கட்சித் தலைவராகும் முயற்சிக்கு தடைக் கற்களைப் போட முனைந்த அன்வாரின் குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் தாண்டி –

அவர் தனது அரசியல் பாதையில் வெற்றிக் கொடியை நாட்டியிருப்பதற்கான காரணங்கள்,

அவரது கடும் உழைப்பு, சாமர்த்தியமான அரசியல் வியூகங்கள், கட்சித் தொண்டர்களிடத்தில் அவர் கொண்டிருந்த அணுக்கமான தொடர்புகள்!

அடுத்த சிலாங்கூர் மந்திரிபெசாரா?

Wan Azizah Wan Ismailஅன்வாருடனும், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர்களுடனும் முரண்பட்டுவிட்ட நடப்பு மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் இனியும் அந்தப் பதவியில் தொடர முடியாது  என்பது தெளிவாகிவிட்டது.

முதலில் பிகேஆர் கட்சித் தலைவரும், அன்வாரின் துணைவியாருமான வான் அசிசாதான் சிலாங்கூர் மந்திரிபெசாராக நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால், மந்திரிபெசார் பதவி என்பது, அடிக்கடி மாநில சுல்தானின் அழைப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டிய பதவி. சுல்தானோடு, பல இடங்களுக்கும் உடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இதனால், ஒரு பெண் மந்திரிபெசார் என்பது இரண்டு தரப்புகளுக்குமே சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தாலும் – இதனால், சுல்தானின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் –

வான் அசிசாவைக் கொண்டுவரும் முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சிலாங்கூர் மாநிலம் அதிகமான சீனர்களையும், இந்தியர்களையும் கொண்ட மாநிலம் என்பதால், இங்கு பாஸ் கட்சியைச் சேர்ந்தவரை மந்திரிபெசாராக கொண்டுவரும் யோசனைகளும் ஜசெக போன்ற கட்சிகளிடத்தில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் கூட்டணி தலைவர்களின் இரகசியக் கூட்டத்தில் பாஸ் கட்சியும், ஜசெகவும் தங்களின் ஆதரவை அஸ்மின் அலிக்கு தெரிவித்திருக்கின்றன எனத் தகவல்கள் கூறுகின்றன.

தனக்குத் தானே குழிபறித்துக் கொண்ட காலிட் இப்ராகிம்

Khalid-Tan-Sri-Sliderகாலிட் இப்ராகிம் சிறந்த முறையில் சிலாங்கூர் மாநிலத்தை நிர்வகித்தார் என்றாலும், அவரால் சிறந்த ஒரு தலைவராக கட்சியிலும், மாநிலத்திலும் உருவெடுக்க முடியவில்லை.

பெரிய நிறுவனங்களை நிர்வகிப்பதில் பரந்த அனுபவம் கொண்ட காலிட் சிலாங்கூர் மாநிலத்தையும் ஒரு நிறுவனத்தைப் போலவே நிர்வகித்தார். சிலாங்கூர்  மாநிலத்தின் அபரிதமான நிதிக் கையிருப்பைக் கூட்டி – அதுதான் மாநிலத்தின் வளர்ச்சி என்பதைக் காட்டும் விதத்தில் காலிட் நடந்து கொள்ளத் தொடங்கினார்.

அதன் பயனாக, மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 2,000 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாகக் கூடியதே தவிர, அந்தப் பணத்தால் மக்களுக்கு பயன் ஏதும் விளையவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மக்கள் தொடர்புடைய திட்டங்களில் காலிட் போதிய கவனம் செலுத்தவில்லை. பல முக்கிய விவகாரங்களில் தன்னிச்சையாக – அதுவும் மக்கள் கூட்டணி தலைவர்கள் – தொண்டர்களின் சிந்தனைகளுக்கு முரண்பாடான விதத்தில் அவர் செயல்பட்டார்.

சிலாங்கூரின் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்களே அவரைச் சந்திக்க முயன்றபோது, “உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் தருகின்றேன், அதற்குள் வந்த காரியத்தை கூறி முடியுங்கள்” என ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி தோரணையில் அவர் அதிகாரத்துவத்தோடு நடந்து கொண்டது,

மலேசிய அரசியலுக்கு பழகிப் போன கட்சியின் தலைவர்களிடத்தில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

தண்ணீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசாங்கத்துடன் அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு மக்கள் கூட்டணித் தலைவர்களிடையே ஆத்திரத்தை மூட்டியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சித் துணைத் தலைவர் தேர்தலில் குதித்து அஸ்மின் அலியின் அரசியல் வாழ்வை முடிக்க அவர் முற்பட்டபோது அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதோடு அவருக்கு எதிர்ப்புகளும் எதிர்பாராத முனைகளில் முளைத்தன.

அவரது சொந்த கோலசிலாங்கூர் தொகுதியிலேயே, எஸ்.மாணிக்கவாசகத்தால் அவர் தோற்கடிக்கப்பட்டார். மாணிக்கவாசகம், அஸ்மின் அலியின் ஆதரவாளர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படியாக, கட்டம் கட்டமாக மக்களிடமிருந்தும், மக்கள் கூட்டணித் தலைவர்களிடமிருந்தும் அந்நியப்பட்டுவிட்ட, காலிட் தனக்குத் தானே குழியைத் தோண்டிக் கொண்ட கதையாக, அவரது அரசியல் முடிவுக்கு அவரே காரணகர்த்தாகிவிட்டார்.

மக்களோடு இணைந்து அஸ்மின் அலி செயல்படுவார்

ANWAR-AZMINமந்திரி பெசாராக நியமிக்கப்பட்டால், அஸ்மின் அலியின் நடவடிக்கைகளும் அரசியல் செயல்பாடுகளும் காலிட்டை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

ஆரம்பம் முதல் அடிமட்டத் தொண்டர்களிடத்தில் ஆதரவு பெற்ற தலைவராக உருவெடுக்கத் தொடங்கியவர் அஸ்மின்அலி.

மக்களை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்துவதில் அவருக்கு இருக்கும் வியூகத் திறனும்,  போர்க்குண அரசியல் அணுகுமுறையும் எதிர்க்கட்சிகளில் பிரசித்தம்.

மந்திரிபெசாராக, அதுவும் பிகேஆர் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் துணைத் தலைவராக – அவரால் வலுவான ஒரு தலைமைத்துவத்தை வழங்க முடியும்.

மக்கள் மன்றத்தில் துணிந்து இறங்கி, அடிமட்டத் தொண்டர்களிடம் அணுக்கமான தொடர்புகளை பாராட்டும் அவரது அணுகுமுறை மக்களிடம் செல்வாக்கைப் பெறும் என நம்பலாம்.

காலிட்டின் அணுகுமுறையால் நேர்ந்த தவறுகள் – பின்னடைவுகள் என்ன என்பதையும் அஸ்மின் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றார் என்பதால் மீண்டும் அத்தகைய தவறுகள் நடைபெறாமல் இருப்பதை அவரால் உறுதி செய்ய முடியும்.

சிலாங்கூர் மாநிலத்தை 14வது பொதுத் தேர்தலில் மீண்டும் மக்கள் கூட்டணி கைப்பற்றுவதற்கு இன்றைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் – அஸ்மின் அலிதான்!

-இரா.முத்தரசன்